செங்கல்பட்டு மாவட்டத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் மின்கலன் பரிசோதனை ஆய்வகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை; மஹிந்திரா நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதேபோன்று, செய்யார் தொழிற்பூங்காவில், மின்வாகன விபத்து பரிசோதனை மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை, 4,10,561 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2,73,448 கோடி மதிப்பிலான 224 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சில திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன.

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் 2012ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில், 125 ஏக்கர் பரப்பளவில் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புத் திட்டமான மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தை நிறுவியது. இந்த மையம், சமீப காலங்களில் பல்வேறு புதிய வகை வாகனங்கள் மற்றும் டிராக்டர்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம், சிப்காட்-செய்யார் தொழிற்பூங்காவில் 454 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள சோதனை தடத்தில், வாகன சவாரி, கையாளுதல் மற்றும் பிற திறன் சரிபார்ப்புகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், கடந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஏப்ரல் 2022 முதல் 4 ஆண்டு காலத்திற்குள் கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு செய்வதாகவும், குறைந்தபட்சம் 850 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது.அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் மஹிந்திரா ஆராய்ச்சி மையம், சிப்காட்-செய்யார் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் மஹிந்திரா எஸ்யூவி வாகனங்களுக்கான பரிசோதனை தளம் மற்றும் கோவையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப மையம் ஆகிய திட்டங்களை செயல்படுத்த முன்வந்துள்ளது.

முதலாவது திட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா மின்கலன் பரிசோதனை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த ஒரு ஆண்டு காலத்திலேயே இதன் தொடக்க விழா நடப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மஹிந்திரா நிறுவனம் சிப்காட்- செய்யார் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் ஒரு மின்வாகன விபத்து பரிசோதனை ஆய்வகம் மற்றும் மின்கலன் கட்டுருவாக்க மையம் நிறுவும் திட்டத்திற்கும் காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். அகில இந்திய அளவில், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது.

இத்தகு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், இத்துறையில் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் ஆர்.வேலுசாமி, அபாந்தி சங்கரநாராயணன், எஸ்.சக்திவேலன் மற்றும் போய்ட்டா தனஞ்சயராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் மின்கலன் பரிசோதனை ஆய்வகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: