இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார்., சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்தை சிறுபான்மை பிரிவினருக்கும் மீதமுள்ள 50 சதவீதத்தை மதிப்பெண் தகுதி அடிப்படையிலும் சேர்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தேசத்தின் நலன் சார்ந்தது. சிறுபான்மை அந்தஸ்து என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குத்தான் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டப்படி, கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
சிறுபான்மை அந்தஸ்து குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. அனைத்து சிறுபான்மையினருக்கும் அரசியலமைப்பில் கல்வி, மொழி ஆகியவற்றில் உரிமை தரப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி இடஒதுக்கீட்டு கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. 50 சதவீத இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம். அப்படி மாணவர்கள் சேரும் பட்சத்தில் அந்த இடங்கள் 50% சிறுபான்மையினர் ஒதுக்கீட்டுக்குள் வராது. எனவே, மனுதாரர் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.
The post மாணவர்கள் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற தேவையில்லை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.