×
Saravana Stores

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ.22ம் தேதி வரை நீட்டிப்பு; சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே 2 முறை ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றமும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நவம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த முறை வழக்கு விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், காணொலி காட்சி வாயிலாக புழல் சிறையில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 22ம் தேதி நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ.22ம் தேதி வரை நீட்டிப்பு; சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai Principal Sessions Court ,Chennai ,
× RELATED செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு