அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் ஹெல்த்வாக் திட்டத்தை நவ.4ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: நவம்பர் 4 ம் தேதி தொடங்கப்படவுள்ள நடப்போம் நலம் பெறுவோம் ஹெல்த் வாக் திட்டத்தின் கீழ் நடைபாதையை தேர்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை சென்னை பெசன்ட் நகர் முத்துலட்சுமி பூங்காவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மேற்கொண்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி : அண்மையில் ஜப்பான் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்ற போது அங்கு நடைப்பயிற்சி செய்ய பிரத்யேக சாலைகள் அமைக்கப்பட்டு இருந்ததை பார்த்தோம். அதே போல தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தலைநகர் சென்னையில் பெசன்ட் நகர் முத்துலட்சுமி பூங்கா தொடங்கி கடற்கரை சாலை வழியாக நிழற்சாலைகளை சுற்றி மீண்டும் முத்துலட்சுமி பூங்காவை வந்தடையும் வகையில் 8 கிலோ மீட்டர் சாலை ஹெல்த் வாக் சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது.

அதன் தொடர்ச்சியாக நடைபாதைகள் மேம்படுத்தும் பணி, சாலையை புதுப்பிக்கும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட உள்ளது. ஒரு நாளைக்கு 8 கிலோ மீட்டர் நடந்தால் தினமும் 10,000 அடி எடுத்து வைக்க படும். இதனால் அடிப்படை உடல்நலம் உறுதி செய்யப்படும். அதிகாலை 5 மணி துவங்கி காலை 8 மணி வரை இந்த ஹெல்த் வாக் சாலையில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. நடந்து வருவதற்கு ஏற்ற சாலை என்பதை உணர்த்தும் வகையில் சிலைகள் மற்றும் செல்ஃபி பாய்ன்ட் அமைக்கப்பட உள்ளது. 4ம் தேதி காலையில் இந்த சாலையை துவக்கி வைத்து கடற்கரை சாலை வரை தமிழ்நாடு முதலமைச்சர் நடை பயிற்சி மேற்கொள்ள உள்ளார். கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு இருக்கும் மேடையில் இருந்து மற்ற 37 மாவட்டங்களில் இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைப்பார். இந்நிகழ்வில் திரை துறை நட்சத்திரங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என 5,000 பேர் வரை பங்கேற்று நடைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு கூறினார்.

The post அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் ஹெல்த்வாக் திட்டத்தை நவ.4ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: