கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திமுக இளைஞர் அணி பைக் பிரசார பேரணி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று காலை தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரணியை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோதங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலினும் பைக் பேரணியில் சிறிது தூரம் கலந்து கொண்டார். இந்த பேரணியில் 188 பைக்குகளில் இளைஞர் அணியினர் பங்கேற்கின்றனர். இன்று முதல் வரும் 27ம் தேதி வரை 13 நாட்களில் 8 ஆயிரத்து 647 கி.மீ தூரத்தை கடக்கும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 504 பிரசார மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஹெல்மெட் அணிந்து, கறுப்பு-சிவப்பு நிற சீருடை அணிந்த இளைஞர் அணியினர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். பைக்கில் கறுப்பு-சிவப்பு நிற கொடிகளை கட்டியிருந்தனர். இந்த பேரணி தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் செல்கிறது. 2வது இளைஞர் அணி மாநாட்டில் இணைவோம், மாநில உரிமை மீட்போம் என்ற வாசகம் தொடக்கவிழா நடைபெற்ற இடத்தில் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவம்பர் 27ம் தேதி சென்னையில், பயணம் நிறைவு பெறுகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்! மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம்.

13 நாட்கள் – 234 தொகுதிகள் – 504 பிரச்சார மையங்கள் – 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும்.இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி – மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்,”எனத் தெரிவித்துள்ளார்.

The post கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: