திருச்சி: ஒன்றிய அரசைக் கண்டித்து திருச்சியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். கோதாவரி- காவிரி இணைப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் கடந்த ஜூலை 28ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, திருச்சியில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பாதுகாக்கும் வகையில் குளிர்சாதன கிடங்குகள் ஏற்படுத்தி தரப்படும். காவிரியில் உரிய தண்ணீரை பெறுவதற்கு தமிழக முதல்வர் டெல்லி செல்ல உள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்றார்.
The post திருச்சியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அமைச்சர் நேரு பேச்சு appeared first on Dinakaran.