×

எல்லையில் நடக்கும் கனிமவள கடத்தல்: லாரிகளை சிறைபிடித்த மக்கள், குண்டர்கள் மூலம் தாக்குதல்

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பெரும்பாலான லாரிகளில் பாடி கட்டமைப்புகளை மாற்றி உயரம் அதிகப்படுத்தி, அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து அதிக அளவில் கற்கள், ஜல்லி, பாறை பொடி போன்ற கனிம வளங்கள் ஏற்றி செல்கின்றனர். இதனால் தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிவதோடு, சாலையில் அதிவேகத்தில் செல்லும் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வப்போது போலீசார் லாரிகளை பிடித்தாலும், கனிமவளம் கடத்தல் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் மார்த்தாண்டம் அருகே சிராயன் குழி, உண்ணாமலைக்கடை பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி அந்த வழியாக கேரளாவுக்கு கனிமங்களை எடுத்துச் சென்ற லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் லாரி டிரைவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லாரி டிரைவர்கள் தங்கள் முதலாளிகளை போனில் தொடர்புகொண்டு பேசினர். உடனே அவர்களது ஏற்பாட்டின் பேரில் வாகனங்களில் குண்டர்கள் வந்து இறங்கினர்.

சாரை சாரையாக வந்திறங்கிய குண்டர்கள் பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினர். தகவலறிந்தது வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கனிமவளம் கடத்திய லாரிகள் மற்றும் பொதுமக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post எல்லையில் நடக்கும் கனிமவள கடத்தல்: லாரிகளை சிறைபிடித்த மக்கள், குண்டர்கள் மூலம் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Nellai districts ,Kerala ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரத்தில் மாயமான சிறுமி குமரியில் மீட்பு..!!