எனினும் பாதிப்பை தவிர்க்க அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. குறிப்பாக, பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை, அனைத்து அலுவலகங்களுக்கும் பொதுவிடுமுறை, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையிலான குழு பொதுமக்களை பாதுகாப்புடன் முகாம்களில் தங்க வைத்து தேவையான நிவாரணம் வழங்குதல், சென்னையில் மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் தலைமையில் குழு அமைத்து களத்தில் பணி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்றைய தினம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்து வேண்டிய வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதேபோல், மழைநீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இயல்புநிலை திரும்பும் என பொதுமக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் புயலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, மழைநீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, யாரும் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்து, அவர்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார்.
இதனையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற முதல்வர், தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலிருந்து களப் பணி ஆற்றுவதற்காக வந்தவர்களுடன் கலந்துரையாடி, இக்கட்டான இச்சூழ்நிலையில் பணிகளை மேற்கொள்ள வந்துள்ள அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பணிகளை செவ்வனே மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல்வர் நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏ பரந்தாமன், தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர், நிருபர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: வரலாறு காணாத வகையில், பெருமழை கடந்த 4ம் தேதி கொட்டி தீர்த்திருக்கிறது. மீனம்பாக்கத்தில் 43 செ.மீ. பெருங்குடி 44 செ.மீ பதிவாகி இருக்கிறது. இதை வைத்தே நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 2021 நவம்பரில் பெருமழை ஏற்பட்டது. அதை மனதில் வைத்தே அப்போது தேங்கி இருந்த மழைநீரை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டோம். பல்வேறு முயற்சிகளை இந்த அரசு எடுத்தது. இதற்கென பல்வேறு வல்லுநர்களைக் கொண்ட குழுவை, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைத்தோம். அந்த குழு பெரிய ஆய்வு நடத்தி, கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வெள்ளநீர் வடிகால் மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டோம். இந்தப் பணிகள் செய்த காரணத்தால், தற்போது ஏற்பட்ட இந்த வரலாறு காணாத வெள்ளத்தை நாம் சந்தித்தபோதும், அதனுடைய தாக்கம் கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெருமளவு குறைந்திருக்கிறது.
அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். உதாரணமாக, 2015ல் கடந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். அதை ஒப்பிடும்போது, அன்றைய தினம் நுங்கம்பாக்கத்தில் 29.4 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 34.5 செ.மீ மழையும் 24 மணி நேர காலஅளவில் பதிவானது. இதனை ஒப்பிடும்போது, தற்போது மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மிக மிக மிக அதிகம். பெருங்குடியில் மட்டும் 44 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 43 செ.மீ. மழையும் 36 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. இது மிக மிக அதிகம். அதேபோல், மிக்ஜாம் புயலானது விரைவாக கடந்து செல்லாமல், நின்று மழை பெய்த காரணத்தால், இரண்டு நாட்கள் சென்னையில் பெருமழை ஏற்பட்டது. அதனால்தான் சென்னையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
இத்தகைய ஒரு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, உடனடி நிவாரணப் பணிகள் மூலமாக உயிரிழப்புகளும், மற்ற பிரச்னைகளும் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால் 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது அதைவிட அதிகமான மழை பெய்திருந்தும் 7 பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இதுவும் ஏற்பட்டிருக்கக்கூடாது. ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
தற்போது 9 மாவட்டங்களில், 61,666 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 11 லட்சம் உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கியிருக்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்து 1 லட்சம் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. தேவையான அத்தியாவசிய பொருட்களும் வந்திருக்கிறது.
மழைநீர் வடிகால்கள் நல்ல முறையில் பணி செய்தாலும், அவை இறுதியாக கடலில் வடியக்கூடிய அடையாறு மற்றும் கூவம் நதிகளின் முகத்துவாரங்களில் புயலின் காரணமாக அலைகளின் அளவு அதிகமாக இருந்த காரணத்தால், இந்த நதிகளில் வெள்ள நீர் மிக மெல்லமாகவே வடிந்தது. இருந்தாலும், அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ள நிவாரணப் பணிகளால் இச்சூழ்நிலையிலிருந்து பெருமழையின் தாக்கம் குறைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளநீரும் விரைவாக வடிந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கடந்த 2015ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திட்டமிடப்படாமல், அடையாறு வரும்போது, 1 லட்சம் கன அடி அளவிற்கு பெருமளவு நீர் திடீரென திறந்து விடப்பட்டது. வெள்ளம் ஏற்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அது ஒரு செயற்கை வெள்ளம். இது இயற்கையாக ஏற்பட்டிருக்கக்கூடிய வெள்ளம். அதையும், இதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, கடந்த நான்கு நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்த நீர் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திறந்து விடப்பட்ட காரணத்தால், இத்தகைய பெருமழையின் போது ஓரளவிற்கு சமாளித்திருக்கிறோம். இத்தகைய பெருமழையின் போதும் அதிகபட்சம் 8 ஆயிரம் கன அடி அளவிற்கு மட்டுமே நீர் திறந்து விடப்பட்டது. இதனால், சென்னையில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் அடையாறு நதியில் தடையின்றி சென்று கடலில் சேர முடிந்தது. இதுபோல, நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும், ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இன்னல்களை பற்றி நான் கேட்டறிந்து, நேரில் சென்று பார்த்தேன். இத்தகைய பெரும் இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டாலும், ஒரு அரசின் உண்மையான கடமை என்பது, இந்த இன்னல்களின் தாக்கத்தைக் குறைப்பதோடு, இதிலிருந்து மக்கள் உடனடியாக வெளிவர தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே ஆகும். இந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி பகுதிகளில் இருந்தும், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு பணியாளர்கள் திரட்டப்பட்டு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பணியாளர்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இதை ஒருங்கிணைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகளின் விளைவாக, சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள இடங்களில், பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. மேலும், 14 அமைச்சர்கள் களத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதற்காக நியமிக்கப்பட்டு அவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
* ஒரு அரசின் உண்மையான கடமை என்பது, இன்னல்களின் தாக்கத்தைக் குறைப்பதோடு, இதிலிருந்து மக்கள் உடனடியாக வெளிவர தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே ஆகும்.
* தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி பகுதிகளில் இருந்தும், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு பணியாளர்கள் திரட்டப்பட்டு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பணியாளர்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
* இதை ஒருங்கிணைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகளின் விளைவாக, சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள இடங்களில், பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.
* ஆயிரம் கோடி பணி எடப்பாடிக்கு பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘‘ரூ.4 ஆயிரம் கோடியில் பணிகள் செய்தும், சென்னை மிதக்கிறது என எடப்பாடி பழனிசாமி ஒரு பெரிய குற்றமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் சொல்கின்ற ஒரே பதில் என்னவென்றால், இதை அரசியலாக்க விரும்பவில்லை. இருந்தாலும், அவர் தொடர்ந்து இதை சொல்லிக் கொண்டிருக்கின்ற காரணத்தால், நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, ரூ.4000 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்ற காரணத்தால்தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத 47 வருடமாக பார்க்காத மழையை இன்றைக்கு பார்த்திருக்கின்றோம். அதேபோல், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் சென்னை தப்பி இருக்கிறது என்று சொன்னால், ரூ.4ஆயிரம் கோடியை திட்டமிட்டு செலவு செய்து அந்தப் பணிகளை எல்லாம் நிறைவேற்றிய காரணத்தினால் தான். அதனை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு காலத்தில் இதை செய்து முடித்திருக்கிறோம்” என்றார்.
The post மிக்ஜாம் புயலால் சென்னையில் 73 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது பாதித்த இடங்களை மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.