சென்னை: சென்னையில் மழை, வெள்ள சேதத்தை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.மீட்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவுபடுத்தி வருகிறார். அனைத்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்லர்கள் என பலரும் கடந்த 3 நாட்களாக பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். இதன்மூலம் 80 சதவீதத்திற்கும் மேல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் சரி செய்யப்பட்டுள்ளது.
‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிட கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட ஒன்றிய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை சென்னை வந்தடைந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் இன்று பிற்பகல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.மிக்ஜாம் புயல் பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது ஒன்றிய அமைச்சர் முருகன், தமிழக நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோரும் உடன் சென்றனர். பின்னர் தலைமை செயலகம் வரும் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 1.30 மணி முதல் 2.30 மணி வரை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
The post மிக்ஜாம் புயல்.. மழை, வெள்ள சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!! appeared first on Dinakaran.