மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் நகர்மன்ற தலைவியை தாக்க முயன்ற அதிமுக கவுன்சிலர்கள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி அவசர கூட்டத்தில் நகர்மன்ற தலைவரை தாக்க முயன்றதாக அதிமுக கவுன்சிலர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அவசரக்கூட்டம் நகர்மன்ற தலைவி மெஹரீபா பர்வீன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சுகாதார சீர்கேடு குறித்து அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளிக்க நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் வராததால் கூட்டத்தை நடத்தக்கூடாது என்றும், அதிகாரிகள் வந்த பின்தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, திமுக கவுன்சிலர்கள் நகராட்சி தலைவி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றனர். இதனால் இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது. நாற்காலி மற்றும் மைக் தூக்கி வீசப்பட்டது. மோதல் முற்றி ஒருவரையொருவர் தாக்க முற்பட்டனர். நகராட்சி தலைவி இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றும் முடியாததால் 11 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக ‘ஆல் பாஸ்’ என கூறிவிட்டு கூட்டரங்கில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஷபீக் தலைமையில் நகர்மன்ற திமுக கவுன்சிலர்கள், மேட்டுப்பாளையம் போலீசில் புகார் மனு அளித்தனர். அதில், ‘‘திமுக நகர்மன்ற தலைவி மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலியை அதிமுக கவுன்சிலர்கள் ஒருமையில் பேசி திட்டமிட்டு உள்நோக்கத்தோடு கூட்டத்தை நடத்த விடாமல் தகராறு செய்தனர். நகர் மன்ற தலைவி மீது பேப்பர்களை வீசி தாக்க முயன்றனர். தகாத வார்த்தைகளை பேசியும், தாக்க முற்பட்ட அதிமுக கவுன்சிலர்கள் சுனில் குமார், மீரான் மைதீன், சலீம், குரு பிரசாத், தனசேகரன், முத்துச்சாமி, மருதாச்சலம் உள்ளிட்ட 9 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறி உள்ளனர். இதேபோல், அதிமுக கவுன்சிலர்கள் தரப்பில் திமுக கவுன்சிலர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் நகர்மன்ற தலைவியை தாக்க முயன்ற அதிமுக கவுன்சிலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: