மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த எடப்பாடி காலில் விழுந்து செல்லூர் ராஜூ ஆசி

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த எடப்பாடி பழனிசாமி காலில், செல்லூர் ராஜூ விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலத்தில் இருந்து காரில் மதுரை வந்தார். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனம் ெசய்ய சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயில் அதிகாரிகள் சார்பில் வரவேற்றனர்.

கோயிலில் மூலவர், மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர், முக்குருணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவருக்கு பிரசாதம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக கோயில் வாசலில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, டாக்டர் சரவணன் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். அப்போது செல்லூர் ராஜூ சால்வை அணிவித்து திடீரென எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வணங்கினார்.

அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, வயது, வித்தியாசம் பார்க்காமல் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட தொண்டர்கள் சாஷ்டாங்கமாக காலில் விழுவது வழக்கம். அவரின் மறைவுக்கு பின் அதிமுகவில் ‘காலில் விழும் கலாச்சாரம்’ முடிவு பெற்றதாக பேசப்பட்டது. ஆனால், தன்னை விட சுமார் 2 வயது குறைந்த எடப்பாடி பழனிசாமியின் காலில், வயது, அரசியல் அனுபவத்தில் மூத்தவரான செல்லூர் ராஜூ காலில் விழுந்தது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாக அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் தெரிவித்தனர்.

The post மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த எடப்பாடி காலில் விழுந்து செல்லூர் ராஜூ ஆசி appeared first on Dinakaran.

Related Stories: