இதற்காக பெங்களூருவில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் அவர் நேற்று மாலை 6.50 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் குடியரசு தலைவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். மேலும், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், முப்படை உயர் அதிகாரிகள், எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, காரில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று. அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை கடல்சார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் காலை 10.15 முதல் 11.15 மணி வரை கலந்து கொள்கிறார். பின்னர் பகல் 11.55 மணிக்கு காரில் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். விமான நிலையம் முதல் கிண்டி ராஜ்பவன் வரையிலும், ராஜ்பவன் முதல் ஓ.எம்.ஆர்.சாலையில் நிகழ்ச்சி நடக்கும் பகுதி வரை சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் 2 இணை கமிஷனர்கள், 4 துணை கமிஷனர்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
* டிரோன்கள் பறக்க தடை
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி அவர் தங்கும் இடம் மற்றும் நிகழ்ச்சி நடக்கும் பகுதிகள் அனைத்தும் சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும், குடியரசு தலைவர் செல்லும் பாதை மற்றும் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் டிரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. அதை மீறி யாரேனும் டிரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடல்சார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்பு சென்னை வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு: முதல்வர், கவர்னர் வரவேற்பு appeared first on Dinakaran.