மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: மணிப்பூரில் நடந்த சம்பவத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): நாட்டையே உலுக்குகிற வகையில் மணிப்பூரில் 2 பெண்கள் ஈவு இரக்கமற்ற முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர நிகழ்வு நடந்துள்ளது. இத்தகைய அவலநிலைக்கு பிரதமர் மோடி ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.

விஜயகாந்த்(தேமுதிக தலைவர்): 2 பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்த கொடூர குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.

ஓ.பன்னீர் செல்வம்: இரு பெண்களும் மர்ம கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிருகத்தனமான செயல். அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி(பாமக தலைவர்): மணிப்பூரில் நடந்த இந்த கொடிய குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை; மனிதர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்பவை.

சரத்குமார்(சமக தலைவர்): பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர் போகும் என்ற அச்ச உணர்வு வரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ (மமக தலைவர்): உலக அரங்கில் நம் நாட்டிற்கு பெரும் தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாகத் தொடர்ந்து கலவரம் தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், மாநில பாஜ அரசும் ஒன்றிய பாஜ அரசும் மவுனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

யாஸ்மின் பரூக்கி(எஸ்டிபிஐ தேசிய பொது செயலாளர்): நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. குக்கி சமூக பழங்குடியினப் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு எதிராக, சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதை ஒன்றிய அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

வி.கே.சசிகலா: பெண்களை இந்த அளவுக்கு இழிவுப்படுத்துகிறவர்கள் மனிதாபிமானமற்ற அரக்கர்களாக தான் இருக்க முடியும். இது போன்று இழிவு செயல்களில் ஈடுபடுபவர்கள் தன்னை பெற்றெடுத்தவரும் ஒரு பெண் தானே என்பதை ஏன் மறந்து போனார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

The post மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: