×

மாமல்லபுரம் நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகராட்சி பகுதிகளில் நேற்று பள்ளி வளாகம் உள்பட பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மேலும், வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு நகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர். மாமல்லபுரம் நகராட்சியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் நிலையில், பள்ளி வளாகங்களை சுற்றிலும் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி, அங்கு கொசு மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நகராட்சி ஆணையர் மு.வெ.கவின்மொழி, நகராட்சி (பேரூராட்சி) தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் உத்தரவின் பேரில், கடந்த 2 நாட்களாக மாமல்லபுரம் நகராட்சியின் 15 வார்டுகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, நகராட்சி ஊழியர்கள் தீவிர தூய்மை பணிகளை மேற்கொண்டு, வாகனங்கள் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுதவிர, இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில், நேற்று அனைத்து பள்ளி வளாகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றி, அங்கு கொசு புழுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் கொசு மருந்து புகையை அடித்தனர். மேலும், பொது இடங்களில் குப்பைகளை போடக்கூடாது. வீட்டின் அருகில் இளநீர் மட்டைகள், டயர்களை வைக்கக்கூடாது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு நகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.

The post மாமல்லபுரம் நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram Municipality ,Mamallapuram ,Mamallapuram… ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...