கிரிப்டோ கரன்சி மூலம் ரூ.1000 கோடி மோசடி செய்த முக்கிய குற்றவாளி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமகிருஷ்ணா நகரில் ஏகே டிரேடர்ஸ் என்ற பெயரில் ராணுவ வீரர்கள், ஓய்வு ராணுவ வீரர்களை குறிவைத்து கிரிப்டோ கரன்சி என்கிற யூனிவர் காயின் என்ற டிஜிட்டல் காயின் நிறுவனத்தை சிலர் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால் வாரத்திற்கு ஒரு லட்சம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளை கூறி விளம் பரம் செய்யப்பட்டது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர்களான நந்தகுமார், கிட்டகனூர் சங்கர், பிரகாஷ், செட்டிப்பள்ளி சீனிவாசன், தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வேலன் ஆகியோர் முகவர்களாக செயல்பட்டு வந்தனர்.

இவர்களிடம் அதிகளவில் ஆட்களை சேர்த்தால் கமிஷன் அதிகளவில் பெற்றுக்கொள்ளலாம் என ஆசை வார்த்தை தெரிவிக்கப்பட்டது. அதன்படி அதிகளவில் ஆட்களை சேர்த்தனர். இதனால் முகவர்கள் கோவா, தாய்லாந்து என வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். மேலும் வீடு, கார் ஆகியவையும் வழங்கப்பட்டது. பின்னர் அதற்கான லாபம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த முகவர்கள் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது, அந்த நிறுவனம் மூடிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுவரை 1000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர் உள்ளிட்ட சில இடங்களில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான அருண்குமார் என்பவரை பொதுமக்கள் பிடித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேற்றிரவு ஒப்படைத்தனர். இவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய், 12 பவுன் நகை, சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வேப்பனஹள்ளியில் புதியதாக நிலம் வாங்க அருண்குமார் சென்றபோது அவர் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பிடியில் சிக்கியிருப்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிரிப்டோ கரன்சி மூலம் ரூ.1000 கோடி மோசடி செய்த முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: