மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

மும்பை: மராட்டிய சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க பாஜக கூட்டணி முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மராட்டிய மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நவ.20ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் Nakabandi பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட கணக்கில் வராத 5 கோடி ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது மட்டுமின்றி Shivapur பகுதியில் கார்களில் இருந்து 25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ரோஹித் பவார், தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக கூட்டணி பணத்தை வாரி இறைத்ததாக புகார் கூறியுள்ள ரோஹித் பவார், பாஜகவின் பணபலத்தை மக்கள் தங்கள் வாக்குகளால் முறியடிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்; பாஜக கூட்டணி எம்எல்ஏக்கள் 150 பேருக்கு தலா 50 கோடி ரூபாய் கொடுப்பதாக மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்துள்ளதாகவும் அதில் முதல் தவணையாக அவர்களுக்கு தலா 15 கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டினார். இரு வாகனங்கள் 15 கோடி ரூபாயுடன் பிடிபட்ட நிலையில் அதிகாரிகளின் உத்தரவுப்படி அவை விடுவிக்கப்பட்டதாகவும், சஞ்சய் ராவத் புகார் தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் கார்களில் இருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்படுவதும் அந்த பணம் பாஜக கூட்டணியின் பணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: