சத்தியமங்கலம்: மதுரை அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படாதது ஏன் என்று முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு துவக்கப்பள்ளிகளில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது. கடும் நிதி நெருக்கடியிலும் கூட இது போன்ற நல்ல திட்டங்களை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. நமது விஞ்ஞானிகள் மகத்தான சாதனை செய்து இருக்கிறார்கள்.
சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியது மற்றும் நிலவில் பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனதார பாராட்டுகிறது. காவிரி நதி நீரை, நடுவர் மன்ற உத்தரவு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா அரசு தண்ணீர் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடு பார்க்காமல் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு விலக்கு மற்றும் கச்சத்தீவை மீட்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. புளியோதரையை தரையில் கொட்டியது தான் மிச்சம். இவ்வாறு அவர் கூறினார்.
The post மதுரை அதிமுக மாநாட்டில் நீட் விலக்கு, கச்சத்தீவு மீட்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படாதது ஏன்?..முத்தரசன் கேள்வி appeared first on Dinakaran.