×

ஒரு வார கால இடைவெளிக்கு பின்னர் குற்றாலத்தில் இன்று மீண்டும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: குற்றாலத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயிலடித்து வந்த நிலையில் நேற்று இரவு பெய்த சாரல் காரணமாக அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாத சீசன் சுமாராக இருந்தது. ஜூலை முதல் பத்து தினங்கள் சீசன் அருமையாக இருந்த போதும், அதனைத்தொடர்ந்து ஒரு வார காலமாக வெயிலடித்தது. சாரல் இல்லை. அருவிகளிலும் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று வெயில் மறைந்து அவ்வப்போது சாரல் பெய்தது. நேற்று காலை, மதியம், இரவு வேலைகளில் லேசான சாரல் காணப்பட்டது. வெயிலின் தாக்கமும் சற்று குறைந்து இருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இன்று காலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக வருகிறது. பழைய குற்றால அருவி, புலிஅருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சுமாராக உள்ளது. ஒரு வார இடைவெளிக்கு பிறகு சாரலுடன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஒரு வார கால இடைவெளிக்கு பின்னர் குற்றாலத்தில் இன்று மீண்டும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : South Khakasi ,
× RELATED சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்