மதிப்பூதியம் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த உள்ளாட்சி பிரதிநிதிகள்

பூந்தமல்லி: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, மதிப்பூதியம் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூந்தமல்லி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு நகர் மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஜூலை மாதம் முதல் மாதம்தோறும் நகர் மன்ற தலைவருக்கு ரூ.15,000 துணை தலைவருக்கு ரூ.10,000, நகர மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 மதிப்பூதியம் வழங்குவதற்கு உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் எதிர்வரும் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிக்காக ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது, பூந்தமல்லி நகராட்சி 13வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் அமைப்பது, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பாரிவாக்கம் சுடுகாட்டில் நவீன எரிவாயு எரியூட்டும் கலன் சீரமைப்பது, பூந்தமல்லி நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வருவதால் அவர்களுக்கு வாகன வசதி ஏற்படுவதற்காக ரூ.18 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் வாங்குவதற்கும், பூந்தமல்லி நகராட்சி கலந்தாய்வு கூட்ட அறையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, பூந்தமல்லி 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த ரவிச்சந்திரன், அரசு அறிவித்துள்ள மதிப்பு ஊதியமான ரூ.5 ஆயிரத்தை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்ததுடன், அந்த தொகையை அதிகாரிகளிடம் உடனே வழங்கினார். மேலும் தனது பதவிக்காலம் முடியும் வரை அரசு வழங்கும் மதிப்பூதிய தொகையை நகராட்சியில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த பணியாளர்களுக்கும் வழங்குவதாக அறிவித்தார். இதனை அங்கிருந்த அனைவரும் வரவேற்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி: நேற்று பொன்னேரி நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி மன்ற தலைவருக்கு ரூ.15,000 துணை தலைவருக்கு ரூ.10,000 கவுன்சிலர்களுக்கு ரூ.5,000 என மதிப்பூதியம் நேற்று வழங்கப்பட்டது. மாத மதிப்பூதியத்தை நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் வழங்கினார். திமுக கவுன்சிலர்கள் வசந்தா செங்கல்வராயன், யாக்கோப், நீலகண்டன், சாமுண்டீஸ்வரி யுவராஜ், நல்ல சிவம், உமாபதி, அஷ்ரப் முனிஷா ஷகீல், பரிதா ஜெகன், இளங்கோ, தனுஷா தமிழ்குடிமகன், ராஜேஷ், பத்மாசீனிவாசன், கவிதா விஜய் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக் கொண்டு தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு முதல்வர் வாழ்க! அனைவராலும் போற்றப்படும் நம்ம முதல்வர் வாழ்க! என கோஷமிட்டு வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்தனர்.

துணைத்தலைவர் விஜயகுமார் அதிமுக தலைமையில் கவுன்சிலர்கள் செந்தில்குமார், கோவிந்தராஜ், சுரேஷ், சரண்யா, அபிராமி, மணிமேகலை ஆகியோர், அதிமுக கவுன்சிலர்களுக்கு அடிப்படை உரிமைகள் செய்து தரவேண்டும், முன்னுரிமை அளிக்கவேண்டும், கடந்த 2 மாதமாக மக்கும் குப்பை மக்காத குப்பை அள்ளுவதற்கு வழங்கப்பட்ட வண்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர மென வெளிநடப்பு செய்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் விரைவில் மாவட்ட அமைச்சர் மூலம் விழா நடத்தி குப்பை அள்ளும் வண்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

The post மதிப்பூதியம் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் appeared first on Dinakaran.

Related Stories: