×
Saravana Stores

ஆயுள் தண்டனை கைதியை தாக்கிய விவகாரம்: வேலூர் சிறைத்துறை பெண் டிஐஜி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு


வேலூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார்(30) என்பவர் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டில் வீட்டு வேலைகளை செய்ய அழைத்து சென்றுள்ளனர்.அப்போது ரூ4.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி சிறைத்துறை வார்டன்கள் கண்மூடித்தனமாக தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட கோரி சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் தாக்கப்பட்டது தொடர்பாக சிறைத்துறை அலுவலர்கள் 3 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தவறிழைத்த சிறைத்துறை அலுவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் குற்றவழக்கு தொடர வேண்டும்.

மேலும் சிறைவாசி சிவகுமாரை உடனடியாக சேலம் மத்திய சிறைக்கு இடம் மாற்ற வேண்டும். சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக சிபிசிஐடி தனது அறிக்கையை அரசிடம் வரும் 17ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். அத்துடன், சிறைவாசிகளின் அனைத்து உரிமைகள் உறுதி செய்யப்படுவதை நீதிமன்றம் இனி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வேலூர் மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார், சேலம் மத்திய சிறைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார், வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறைத்துறை அலுவலர்கள் மணி, பரகாஷ், ராஜா சுரேஷ் உட்பட 16 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post ஆயுள் தண்டனை கைதியை தாக்கிய விவகாரம்: வேலூர் சிறைத்துறை பெண் டிஐஜி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,DIG ,Vellore ,Sivakumar ,Manikam Fort ,Krishnagiri District ,Vellore Central Jail ,Vellore Jail ,
× RELATED டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்று...