×

நாகர்கோவில் அருகே பயங்கரம் சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டி கொன்று எரிப்பு: வழக்கு தொடுத்த வாலிபர் சரண்

ஆரல்வாய்மொழி: நாகர்கோவில் அருகே சொத்து வழக்கு விவகாரத்தில் வக்கீலை வெட்டி கொன்று எரித்த வாலிபர் போலீசில் சரண் அடைந்துள்ளார். நாகர்கோவில் அருகே பீமநகரி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(31). இவருக்கு குடும்பசொத்து தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனை சரிசெய்ய தக்கலை அருகே முட்டைக்காடு சரல்விளையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி (55) என்பவரை அணுகினார். அப்போது அவரிடம் தனது நிலத்தின் அசல் ஆவணங்களை கொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணை கடந்த 3 வருடமாக நடந்து வருகிறது.

வழக்கு விசாரணை என்ற பெயரில் இசக்கிமுத்துவிடம் இருந்து கிறிஸ்டோபர் சோபி அடிக்கடி பணம் கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது. இசக்கிமுத்துவும், அவர் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் இசக்கிமுத்து, தனது நிலத்திற்கான ஆவணங்களை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர் ஆவணங்களை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் இசக்கிமுத்து, வக்கீல் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வக்கீல் கிறிஸ்டோபர் சோபி, இசக்கிமுத்துவை செல்போனில் தொடர்பு கொண்டு வாழைக்கன்றுகள் தரும்படி கேட்டுள்ளார். இசக்கிமுத்துவும் வாருங்கள் தருகிறேன் கூறியுள்ளார். அதன்படி வக்கீல் கிறிஸ்டோபர் சோபி பைக்கில் நேற்று முன்தினம் பீமநகரிக்கு வந்துள்ளார். இருவரும் பீமநகரி மண் ஆராய்ச்சி நிலையம் அருகே ஒரு குளக்கரையில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நில ஆவணங்களை தரும்படி இசக்கிமுத்து கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து அரிவாளால் கிறிஸ்டோபர் சோபியை வெட்டி கொலை செய்தார்.

பின்னர் உடலை தரதரவென இழுத்துச்சென்று, வக்கீலின் பைக்கில் இருந்த பெட்ரோலையே எடுத்து, கிறிஸ்டோபர் சோபி உடலில் ஊற்றி தீவைத்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று காலை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு சென்று, வக்கீல் கிறிஸ்டோபர் சோபியை கொலை செய்ததாக கூறி இசக்கிமுத்து சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வக்கீலின் எரிந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ‘எதிர்தரப்பு வக்கீலுடன் தொடர்பால் கொன்றேன்’
போலீசிடம் இசக்கிமுத்து அளித்த வாக்குமூலத்தில், வக்கீலிடம் நில ஆவணங்களை கொடுத்து இருந்தேன். அவர் எதிர்தரப்பு வக்கீலுடன் தொடர்பில் இருந்து கொண்டு வழக்கை இழுத்தடித்ததோடு, அதிக பணம் என்னிடம் இருந்து வாங்கினார். எனது நிலத்திற்கான ஆவணங்களை பல முறை கேட்டும் தரவில்லை. இதனால் அவர் மீது ஆத்திரம் இருந்தது. வாழைக்கன்று வாங்க வந்த கிறிஸ்டோபர் சோபி என்னையும், எனது மனைவியையும் ஆபாசமாகவும், தரக்குறைவாகயும் பேசினார். இதனால் ஆத்திரத்தில் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

The post நாகர்கோவில் அருகே பயங்கரம் சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டி கொன்று எரிப்பு: வழக்கு தொடுத்த வாலிபர் சரண் appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Saran ,Izakimuthu ,Bhimanagari ,Nagarko ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டில் இருந்து திருட்டை தடுத்த நபர்