அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இப்போதே தேர்தல் ஜூவாலைகள் பற்றி எரியத் தொடங்கி விட்டது. தேர்தல் களத்தில் தனியாக கம்பு சுற்ற நினைக்கும் பாஜவிற்கு, எதிர்கட்சிகள் தொடுக்கும் ஏவுகணைகள் இப்போதே அச்சத்தை உருவாக்கி வருகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்கட்சிகளின் பிரமாண்ட முதல் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் பாஜவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றிட கை கோர்த்து நின்றன. இன்று பெங்களூருவில் இரண்டாம் கட்டமாக 24 எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
கருத்து வேறுபாடுகளை களைந்து, பாஜவை தோற்கடிப்பதே இலட்சியம் என எதிர்கட்சிகளின் அறைகூவல் இன்றும், நாளையும் பெங்களூருவில் ஓங்கி ஒலிக்கும். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார். காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என அகில இந்திய அரசியலில் பிரதான இடம் பிடித்த பல்வேறு கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன. தமிழகத்தில் இம்முறை திமுக மட்டுமின்றி, மதிமுக, விசிக, பார்வர்ட் பிளாக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளும் பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வலுவாக இருக்கும் மாநிலங்களில் எதிர்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்குவது, குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு, ஆளும் பாஜவை வீழ்த்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படும். மணிப்பூரில் நடக்கும் கலவரங்கள், ஒன்றிய அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு உள்ளிட்டவையும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. வரும் லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளில் எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையால் நாட்டில் காங்கிரசின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை தற்போது கைப்பற்றியுள்ள நிலையில், பெங்களூருவில் இன்று நடக்கும் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம், ஒன்றிய அளவில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னெடுப்பாக இருக்கும். இன்று மாலை 6 மணிக்கு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 24 கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி தேநீர் விருந்து அளிக்கிறார். இதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எதிர்கட்சிகள் நடத்தும் அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களால், பாஜ கூடாரம் கலகலத்து போயுள்ளது.
இப்படியே போனால் எதிர்கட்சிகளின் பிரமாண்டத்திற்கு முன்பே நாம் சரிந்து விடுவோமா என்ற அச்சம் பாஜவிற்கு வர தொடங்கியுள்ளது. வரும் 20ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், அதிலும் எதிர்கட்சிகளை சமாளிக்க பாஜ படாதபாடு பட வேண்டியதிருக்கும். மொத்தத்தில் இந்தியாவை பொறுத்தவரை மோடி அலை முடிவு பெற்று விட்டது. பாஜவிற்கு எதிரான எதிர்ப்பலைகள் பரவத் துவங்கியுள்ளன.
The post எதிர்ப்பலை பரவட்டும் appeared first on Dinakaran.