ஒரு கிணற்றில் தோண்ட தோண்ட நீர் சுறக்கும். ஆனால் எவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவு நீர்தான் சுரக்கும். நம் முயற்சியின் அளவிற்குத் தான் பலனும் இருக்கும். அதுபோல ஒரு மனிதருக்கு அவர் கற்க கற்க அவரது அறிவு பெருகும். மக்கள் எவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவே அறிவும் வளரும். ஒரு நூலில் இருந்து ஒரு ஆசிரியரிடம் இருந்து கற்கும்போது நாம் எவ்வளவு உழைப்பையும் முயற்சியையும் போடுகிறோமோ அந்த அளவிற்கு நமது கற்கும் திறனும் மிகும் அறிவும் மிகும். இல்லையென்றால் நுனிப்புல்லை மேய்ந்தது போன்று ஆகிவிடும். மணல் கேணியில், தோண்டிய பின், சிறிது காலத்தில் மண் சரிந்து உள்ளே விழும். நீர் கலங்கும். உள்ளே விழுந்த மண்ணைத் தோண்டி எடுத்து வெளியே போட வேண்டும். அப்போதுதான், அதில் உள்ள நீரை பயன் படுத்த முடியும். அதுபோல, ஒரு முறை கல்வி கற்றுவிட்டால் அப்படியே விட்டுவிட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும் மேலும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் இருக்கும். அதற்கு நாம் கற்றதை பிறருக்கும் பயன்படும் வகையில் கற்பித்தல் வேண்டும்.
கற்றதனால் பயன் என்னவென்றால் மக்களுக்கு கற்றுக் கொடுப்பதுதான். கற்றதைப் பிறருக்குக் கற்பிப்பதுதான் சிறந்த நினைவாற்றலுக்குச் சரியான வழியே தவிர கற்றலோடு மட்டுமே நிறுத்திக்கொள்வதால் எந்த பயனும் இருக்காது. நாம் கற்ற கல்வி பெற்ற அறிவைப் பலருக்கும் கொடுத்தால்தான் அவர்களும் பயன்பெறுவார்கள். அதனால் கற்பித்தல் என்பது மிகவும் பயனுள்ளதாகும். மற்றவர்களுக்கு வழி காட்டுவது, நேர்வழியில் மக்களை அழைத்துச் செல்வது இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பது, தாகத்தில் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் கற்ற கல்வியைப் பிறருக்கு கற்றுக் கொடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.
The post கற்போம்… கற்பிப்போம்! appeared first on Dinakaran.