சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது மணிப்பூர் டிஜிபி ஆக.7ல் நேரில் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு எந்திரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் மணிப்பூர் டிஜிபியை ஆக.7ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்டதும் தொடர்பாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. நேற்றும் மணிப்பூர் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரம் வருமாறு: மணிப்பூரில் கட்டுப்பாடற்ற வன்முறை தூண்டிவிடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிக்க வேண்டிய மாநில காவல்துறை அதை இழந்து விட்டது. அங்கு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. அரசமைப்பு எந்திரம் அங்கு செயல்படவே இல்லை. அனைத்து எப்.ஐ.ஆர்களிலும் சிபிஐ விசாரணை நடத்துவது கடினம். எனவே வழக்குகளை கண்காணிக்க முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஏனெனில் வழக்கு பதிவு செய்யபட்டது.

தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்கள் போதுமானதாக இல்லை. கொலை, பலாத்காரம், தீ வைப்பு,கொள்ளை, வீட்டுச் சொத்துகளை அழித்தல், பெண்களை நிர்வாணப்படுத்துதல், பலாத்காரம் செய்தல், மத வழிபாட்டுத் தலங்களை அழித்தல் தொடர்பான வழக்குகளில் எத்தனை எப்.ஐ.ஆர்.கள் உள்ளன என்பதை அரசு தனித்தனியாக பிரித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இதுவரை பதிவு செய்யப்பட்ட 6,000க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர்.களில் எத்தனை பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிய விரும்புகிறோம். ஏனெனில் விசாரணை மிகவும் மந்தமாக உள்ளது. அங்கு எப்ஐஆர்கள் பதிவு, கைது நடவடிக்கை, வாக்குமூலம் பதிவு எல்லாமே மந்த கதியில் நடந்துள்ளது. வழக்குகளில் கைது நடவடிக்கை இல்லை. வழக்கு தொடர்பான அறிக்கைகள் பதிவு செய்யப்படவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நிர்வாண வீடியோ வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்வதில் நீண்ட கால தாமதம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அங்கு அரசு எந்திரம் தாமதமாகவும், சோம்பலாகவும் நடந்துள்ளது. இரண்டு மாதங்களாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கூடிய சூழ்நிலை அங்கு இல்லை. மே மாதம் முதல் ஜூலை இறுதி வரை, மாநிலத்தில் அரசு எந்திரம் முற்றிலும் சீர்குலைந்து, எப்ஐஆர் கூட பதிவு செய்ய முடியாத அளவுக்குச் செயலிழந்துவிட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. காவல்துறை அதிகாரியால் கைது செய்ய ஒரு பகுதிக்குள் நுழைய முடியவில்லை. மாநில சட்டம் ஒழுங்கு எந்திரத்தால் குடிமக்களைப் பாதுகாக்க முடியாவிட்டால், குடிமக்கள் எங்கே எஞ்சுவார்கள். இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,’ இரண்டு பெண்கள் நிர்வாண அணிவகுப்பு தொடர்பாக போலீசார் ‘ஜீரோ’ எப்ஐஆர் பதிவு செய்தனர். மேலும் சிறுவன் உட்பட 7 பேரை இந்த வழக்கில் மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோ வெளியான பிறகு, மாநில காவல்துறை பெண்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தது’ என்று தெரிவித்தார். அப்போது நீதிபதிகள்,’ பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறலாம். ஆனால் வாக்குமூலத்தை பகலில் பதிவு செய்ய வேண்டாம். மேலும் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிய விரும்புகிறோம். இதனால் மணிப்பூர் டிஜிபி திங்கட்கிழமை(ஆக.7) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

The post சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது மணிப்பூர் டிஜிபி ஆக.7ல் நேரில் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: