எதிர்காலமே குறிக்கோள்
கும்பராசியினர் ஒருவரைத் தன் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவரோடு தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை பற்றி கலந்து பேசுவார். அவருடைய எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புவார். இவர்கள் இருவரும் இணைந்து எவ்வாறு செயல்படலாம் என்பது பற்றித் திட்டமிடுவார்கள். கிட்டத்தட்ட ஒரு தொழில்முறைத் தொடர்பு போலத்தான் இவர்களின் காதல் வாழ்க்கை அமையும். பெரும்பாலும் இவர்கள் விவாகரத்து செய்வதில்லை.
காதல் தோல்வி கிடையாது
காதல் என்பது காதலுக்காக அல்ல. இலக்கு நோக்கிய வெற்றிப் பயணத்திற்கான கூட்டணி என்பதே கும்பராசியின் கொள்கையாக இருக்கும். இதனால் இவர்களுக்கு பெரும்பாலும் காதல் தோல்வி என்பது இருக்காது. கும்பராசியினர் காதலை ஒரு உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக பார்க்காத காரணத்தினால் கும்பராசி ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலில் பெரிய பரவசமோ ஏமாற்றமோ இருப்பதில்லை. இவர்கள் சனி ராசியில் பிறந்தவர்கள், இவர்கள் ராசியுடன் சுக்கிரன் குரு போன்ற சுப கிரகங்கள் பார்வை சேர்க்கை பெற்றிருந்தால், சிலருக்கு சுக்கிரனால் காதலிப்பதில் ஆர்வமோ அல்லது குருவினால் தாம்பத்தியத்தில் ஆர்வமோ ஏற்படும்.
குடும்பம் ஒரு கதம்பம்
கும்பராசியினரின் குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். காரணம் சிக்கனம், குழந்தை வளர்ப்பு, பிள்ளைகளின் கல்வி, குடும்பத்தாரின் உடல்நலம் போன்றவற்றில் இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இவை மட்டுமே இவர்களின் முன்னுரிமைகளாக இருக்கும். எனவே கும்ப ராசிக்காரரைத் திருமணம் செய்து கொள்பவர் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆனால், வாழ்க்கையில் இன்பம், துன்பம், சண்டை, சச்சரவு, ஊடல், கூடல் போன்றவை இருக்காது. ஹாஸ்டல் வாழ்க்கை போல எல்லாம் சரியான நேரத்தில் சரியானஅளவில் கிடைக்கும் என்பது உத்தரவாதம் உண்டு.
அதிகாரம் மிக்க துணை கும்பராசிக்கு ஏழாம் இடம் சிம்ம ராசியாக இருப்பதனால், அந்த ராசிக்கு அதிபதியான சூரியன் கும்பராசி அதிபதியான சனிக்குப் பகைவனாக இருப்பதனால், இவர்களின் காதல் வாழ்க்கை உணர்ச்சிமயமான வாழ்க்கையாக இல்லாமல் அதிகாரத்துக்குத் கட்டுப்பட்ட வாழ்க்கையாக இருக்கும். இவரது வாழ்க்கைத் துணைவர் அதிகார குணம் கொண்டவராக இருப்பார். இவர் அடங்கிப் போவார். அரசு பதவி அல்லது தலைமைப் பதவியில் இருப்பார். அந்த அதிகாரத்தை அவர் கும்பராசி கணவன் அல்லது மனைவியிடம் காட்டுவார்.
பொறுப்பு மிக்க பெற்றோர்
கும்பராசிப் பெற்றோர், தங்கள் குழந்தைகள் மீது எந்த நேரமும் ஒரு கண்காணிப்பும் கண்டிப்பும் உடையவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் வளர்ச்சி பற்றிய சிந்தனை இவர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். குழந்தைகளுக்காகவே வாழ்கின்றவர்கள் என்றுகூட சொல்லலாம். குழந்தையின் உணவு, ஓய்வு நேரம், படிப்பு, துணிமணி, ஆசிரியர்கள், நண்பர்கள் என்று அவர்கள் குறித்த நூறு விஷயங்களில் இவர்கள் அக்கறை காட்டுவார்கள். அதுபோலவே, வாழ்க்கைத் துணைவரின் (கணவன் நல்லது மனைவி) உணவு, உடை, தலை அலங்காரம், செருப்பு, தொழில், நண்பர், மேலதிகாரி, கீழ்நிலைப் பணியாளர், வீட்டு வேலைக்காரர், அவர் ஆபிஸ் வாட்ச்மேன் என்று அவர்களைச் சுற்றி இருக்கும் பல விஷயங்கள் மீது இவர்களின் அக்கறையும் கவனமும் இருக்கும்.
எல்லாம் இன்பமயம்
கும்ப ராசியினர், தாம் இருக்கும் இடத்தில் கண்கொத்திப் பாம்பு போல குடும்பத்தாரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் கண்களில் இருந்து எதுவும் தப்பாது. ஆனால், எதையும் தெரிந்துகொண்டது போல அந்த நேரம் காட்டிக்கொள்ளாமல் பிறகு ஒரு நேரம் அதைச் சுட்டிக்காட்டி சரி செய்து விடுவார்கள். இவர்களால், தான் இருக்கும் இடத்தில் ஒரு கோளாறு அல்லது தகராறு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாது. எதையும் தன்னால் சரி செய்ய முடியும் என்ற அதீத தன்னம்பிக்கை உடையவர்கள். இதனால் யார் என்ன தவறு செய்தாலும் உடனே அதை எடுத்துச் சொல்லி திருத்திக்கொள்ளச் சொல்வார்கள். இவர்களே தக்க ஆலோசனை வழங்குவார்கள். அவர்களுக்கு நீண்டகாலத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பார்கள்.கும்பராசியினர், தன் முதலாளிக்கும் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் உண்மையாகவும் விஸ்வாசமாகவும் இருப்பார்கள். அதுபோலவே, வீட்டில், தான் ஏற்றுக் கொண்ட வேலை எதுவாக இருந்தாலும், செம்மையாக செய்து முடிப்பார்கள். இல்லப் பராமரிப்பு அல்லது மேலாண்மைப் பணி என்று எதுவாக இருந்தாலும், 100% ஒப்படைப்பு உள்ளவர்களாக விளங்குவார்கள். இவர்களின் எந்த வேலையிலும் குற்றம் கண்டுபிடிக்க இயலாது.
கண்ணியவான்கள்
கும்ப ராசியினர் தோற்றத்திலும் நடை உடை பாவனைகளிலும் பேச்சிலும் கண்ணியமாகவும் கௌரவமாகவும் நடந்து கொள்வார்கள். குடும்பப் பெருமையைக் காப்பாற்றுவார்கள். எந்த நிலையிலும் கண்ணியக் குறைவான உடை உடுத்துவதோ அல்லது ஆபாசமான முறையில் நடந்துகொள்வதோ பேசுவதோ சிரிப்பதோ இவர்களிடம் பார்க்க முடியாது. எதிர்பாலினரைக் கவரும் முயற்சியில் இறங்குவதில்லை. சில சமயம் குடும்பத்தினர் அறிவுறுத்தலின் பேரில் ஃபேஷனாக உடை உடுத்துவர். உடனே எனக்குச் சரிவராது என்று மாற்றிவிடுவர்.
சினம் தவிர்ப்பார்
கும்பராசியினருக்குக் காதலும் தூரம் கோபமும் தூரம். இவர்கள் கோபப்படும் நேரத்தில்கூட அதனை சரியான முறையில் வெளிப்படுத்துவார்களே தவிர, பிள்ளைகளை அடிப்பது, கணவனை ஏக வசனத்தில் பேசுவது, மூத்தவர்களை கேவலமாக நடத்துவது என்ற பழக்கங்கள் இவர்களிடம் இருக்காது. தன் கோபத்தை அமைதியாக வெளிப்படுத்துவார்கள். மனதில் வன்மம் வெறுப்பு கொள்வதில்லை. இதனால் கும்பராசியினரின் குடும்பம் அமைதியாக இருக்கும். குடும்பத்தில் குழப்பம் வராது. சண்டை சச்சரவு தவறான புரிதல் கருத்து முரண்பாடு போன்றவற்றிற்கு இடம் இருக்காது.
பொருத்தமான ஜோடி
கும்பராசியினருக்குப் பொருந்தக்கூடிய ராசிகள் என்றால் மிதுனம், துலாம், தனுசு என்று கூறலாம். இவர்கள் ரசிக்கக்கூடிய ராசிகள் என்றால் நெருப்பு ராசியாகிய மேஷம் மற்றும் சிம்மம் ஆகும். இரண்டும் சனி ராசி என்பதால் மகர ராசியினர் இவர்களோடு இணைந்து செல்லக்கூடும். ஆனால், இருவருக்கும் இடையே குணங்கள் வேறுபடும். மன ஒற்றுமை இருக்காது. மொத்தத்தில் கும்பராசி ஆண் அல்லது பெண்ணைக் காதலிப்பவர்கள் மற்றும் திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
The post கும்ப ராசியினர் காதலும் குடும்பமும் appeared first on Dinakaran.