×

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்


நாகர்கோவில்: குமரியை சேர்ந்த தமிழக பா.ஜனதா முக்கிய நிர்வாகி மீது கட்சி பணம் ரூ.1200 கோடியை சுருட்டியதாக ஆடியோ வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட பா. ஜனதா நிர்வாகிகள் மத்தியில் கட்சி தேர்தல் செலவிற்கு போதிய பணம் ஒதுக்கவில்லை. ஒரு சில இடங்களில் கட்சி நிர்வாகிகள் பணத்தை சுருட்டியதாக தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. விளவங்கோடு இடைத் ேதர்தல் வேட்பாளர் தேர்விலும் சிலர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் ஆடியோ ஒன்று இன்று காலை முதல் வைரலாகி வருகிறது. அதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று ஒருவர் தனது பெயரையும், மொபைல் நம்பரையும் கூறி அறிமுகம் செய்து கொள்கிறார். பின்னர், நரேந்திர மோடி, அமித்ஷா, அண்ணா மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு ஆங்கிலத்தில் தான் அனுப்பிய புகாரை தமிழில் மொழி பெயர்த்து கூறுகிறேன் என்று கூறி பேச தொடங்குகிறார்.

அதில், கன்னியாகுமரியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி கட்சிக்கு வரும்போது ஒன்றுமில்லாமல் வந்தார். ஆனால் தற்போது ஆயிரம் கோடிக்கு அதிபதி. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, மேலும் ரூ.200 கோடியை சுருட்டி விட்டார். கடந்த எம்.எல்.ஏ. தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் அதிகளவு கொள்ளை அடிக்கவில்லை. கடந்த 2019 தேர்தலில் அதிக பணம் சுருட்டியுள்ளார். இப்படி கொள்ளை அடித்த பணத்தை மேல்மட்ட அளவில் பிரித்துக் கொண்டனர். ஒரு சில மாவட்ட தலைவர்களுக்கு பணம் அளித்து உள்ளார். இப்போது அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுக்கவில்லை. சில நாட்கள் கழித்து அமைதி ஏற்பட்ட பின்னர், அது அவருக்கு திரும்பி சென்று விடும். எரிகிற வீட்டில் பிடுங்குவது போல் எந்தெந்த வழியில் கொள்ளை அடிக்க முடியுமோ அப்படி அடித்துள்ளார்.

கீழ்மட்ட அளவில் கட்சியை வளர்க்க முயற்சிக்கவில்லை. கட்சி வளர்ச்சி பற்றி அக்கறை இல்லை. பகல் வேசம் போடுகின்றார். எல்லோரையும் திருட்டு வேலை செய்ய பயிற்சி அளித்து வைத்துள்ளார். 90 சதவீதம் பாஜனதா கேடர்ஸ் நல்ல வொர்க்கர்கள். அவர்களை அவர் வேலை செய்ய விடவில்லை. தமிழகத்தில் 2 மாவட்டங்களில் ரூ.3 கோடி கையாடால் செய்து உள்ளனர். பல நிர்வாகிகள் சொகுசு கார்கள், பங்களாக்கள் வாங்கி குவித்து உள்ளனர். நீங்கள் சம்பாதியுங்கள். வேலை செய்யும் கட்சி அடிமட்ட தொண்டர்களுக்கு, கோடிகளில் இல்லாவிட்டாலும், சில லட்சங்கள் கொடுத்து விட்டு கொள்ளை அடியுங்கள். கட்சி அடிமட்ட தொண்டர்கள் தினக்கூலிகள். அவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்.

இந்த நிர்வாகிகள் சுமார் ரூ.1200 கோடி வரை மோசடி செய்துள்ளனர். எனவே முக்கிய நிர்வாகியை சஸ்பெண்ட் செய்து விட்டு, கொள்ளை அடித்தவர்கள் மீது விசாரணை கமிஷன் வைத்து கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் கொள்ளை அடித்தவர்கள் நீக்கப்படுவார்கள். கட்சி வேலை செய்பவர்களுக்கு எதிர்காலம் உள்ளது. இவர்கள் ஆட்டம் நீடிக்காது. இவ்வாறு அந்த ஆடியோ நீள்கிறது. தற்போது இந்த ஆடியோ குமரியில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனால், கட்சியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu BJP ,Kumari ,Nagercoil ,Tamil Nadu Janata Party ,Kanyakumari District ,Janata ,Dinakaran ,
× RELATED காதலனுடன் ஆசிரியை உல்லாசம் நேரில்...