கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பியது…தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 1066 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பயணித்து கடலூர் வழியாக வங்கக்கடலில் இணைகிறது. கிருஷ்ணகிரி அருகே இந்த ஆற்றின் குறுக்கே
கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த கே ஆர் பி அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் சேமிக்கப்பட்டு இரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 9012 ஏக்கர் நிலங்கள் பாசன பெற்று வருகின்றன.

கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக அணை தனது முழு கொள்ளளவான 52 அடியில் 50.65 அடியை எட்டியுள்ளது. அதன் காரணமாக அணைக்கு வரும் 1066 கன அடி நீரும் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றின் கரையை கடக்கவும், ஆற்றுக்குள் இறங்கவோ, கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பியது…தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: