ஊட்டி: கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் ரூ.2.38 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ புகையிலை மற்றும் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு சில கடைகளில் விற்பனை செய்வதாக தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுரேந்தர் ஆகியோர் கிடைத்த தகவலை உறுதி செய்து குன்னூர் குற்றப்பிரிவு போலீசாருடன் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருக்கும் மளிகை கடையில் சோதனை செய்தனர்.
இதில் அந்த கடையில் விற்பனைக்காக 3,000 பாக்கெட் ஹான்ஸ், 12 ஆயிரத்து 150 பாக்கெட் பான் மசாலா என மொத்தம் சுமார் 150 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் ஜெயசிம்மன் (55) மீது கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கோத்தகிரி மார்க்கெட்டில் ரூ.2.38 லட்சம் புகையிலை பறிமுதல்: மளிகை கடைகாரர் கைது appeared first on Dinakaran.