அரசர்களை வழிநடத்திய திருவாவடுதுறை ஆதீனம் சுதந்திரத்தின் சாட்சி சோழ செங்கோல்: சுவாரஸ்ய தகவல்கள்

டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்திற்கு பதிலாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020ல் அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமான பணிகள் முடிந்து இந்த புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவின்போது, பிரதமர் மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் ஒரு செங்கோலை வழங்க உள்ளார். இச் செங்கோல் 1947ல் நாடு சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோலாகும். இந்த செங்கோல் எப்படி உருவானது என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த மடங்களில் மிகத்தொன்மையானது. 14ம் நூற்றாண்டில் மூவலூரில் பிறந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரால் இந்த ஆதீனம் துவங்கப்பட்டது. ஸ்ரீ மெய்கண்ட சந்தான மரபில் வந்த சித்தர் சிவப்பிரகாச சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட மூவலூர் வைத்தியநாதரே பின் நமச்சிவாய தேசிகராக மாறி மடத்தை நிறுவினார். இன்று 24வது பட்டமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டார சந்நிதிகள் வீற்றிருக்கிறார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு விஜயநகர அரசு, நாயக்கர் அரசு, தஞ்சாவூர் மராட்டிய அரசு, திருவிதாங்கூர் ராஜ்ஜியம், சேதுபதி மன்னர்கள் என எல்லா அரச குடும்பங்களுடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வேதாகமத்தை- பண்டார சாத்திரங்களை – திருமுறைகளை கொண்டு சைவ சமயத்தை பரவச் செய்யும் பொறுப்பு ஆதீனங்களிடமே உள்ளது. ஆதீனம் மற்றும் இதர மடங்கள் எல்லாமே தங்கள் சம்பிரதாயத்தை காக்கும் அளவிற்கு இந்த பண்பாட்டையும், நிலத்தையும் காக்கும் பொறுப்பையும் பெற்றுள்ளனர்.

அரசர்களை வழிநடத்தவும், அவர்கள் தர்மத்தை மீறும் போது சுட்டிக் காட்டவும், இந்த நிலத்தில் வேதாகம தர்மம் நிலைத்து செழிக்கவும் மடாதிபதிகளின் பங்கு ஈடு இணையற்றது. அரசர் காலங்களோடு ஆதீனங்களின் பணி அரசியலில் முடிந்து விட்டது என்றில்லை. எந்த வழியில் ஆட்சி நடந்தாலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதில் மடாதிபதிகளின் பங்கு பெரிய அளவில் இருக்கும். அந்த வகையில்தான் இந்தியா சுதந்திரம் பெற்று ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு நேரடியாக இருந்தது.

சோழ மன்னர்களின் ஆட்சியில் முக்கிய அங்கமாக விளங்கி வந்தது செங்கோல். குறிப்பாக, அதிகார மாற்றத்தை குறிக்கும் வகையில் புதிய மன்னர்கள் ஆட்சி பொறுப்பேற்கும்போது செங்கோல் ஒப்படைக்கப்படும். இதை குறிக்கும் வகையில்தான் தற்போதும் அரசியல் கூட்டங்களில் தலைவர்களுக்கு செங்கோல் வழங்கப்பட்டு வருகிறது. நம்நாட்டின் சுதந்திரத்திற்கு அடையாளமாக இருந்த ‘செங்கோல்’ திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது என்பதும், அந்த செங்கோல் பாரதத்தின் புதிய நாடாளுமன்றத்தை தற்போது அலங்கரிக்கப் போகிறது என்பதும் தமிழகத்திற்கு பெருமையே.

ஆதீனம் இன்று டெல்லி பயணம்
திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது: 5 அடி உயரம் கொண்ட இந்த செங்கோல் தங்க முலம் பூசப்பட்டது. செங்கோலின் மேற்பகுதியில் நீதியின் அடையாளமாக திகழும் நந்தி சிலை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோல் ஜவஹர்லால் நேருவுடன் தொடர்புடைய பல வரலாற்று பொருட்களுடன், அலகாபாத் அருங்காட்சியகத்தில் நேரு கேலரியின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டு இருந்தது. 28ம் தேதி டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது, பிரதமர் மோடியிடம் இந்த ெசங்கோலை வழங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். டெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்றிரவு (26ம்தேதி) சென்னை செல்கிறார். தொடர்ந்து, சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

The post அரசர்களை வழிநடத்திய திருவாவடுதுறை ஆதீனம் சுதந்திரத்தின் சாட்சி சோழ செங்கோல்: சுவாரஸ்ய தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: