கேரளாவில் 2 ஆண்டுகளில் 12 பேரை காவு வாங்கிய காட்டுயானை அரிசிக்கொம்பன் ஆட்டம் ஆரம்பம்…? மலைப்பகுதியில் தேடுதல் பணி தீவிரம்

சின்னமனூர்: இடுக்கி மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அரிசிக்கொம்பன் எனும் காட்டுயானை, தற்போது தமிழகத்தின் மேகமலை வனப்பகுதியிலும் விசிட் அடித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், யானை இரங்கல், மூலத்துறை, தோண்டிமலை உள்ளிட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த அரிசிக்கொம்பன் யானை, கடந்த 2 ஆண்டுகளில் 12 பேரை கொன்றுள்ளது.

இந்த யானையை விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கேரள வனத்துறை மற்றும் போலீசார் 5 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி, அரிசிக்கொம்பனை பிடித்தனர். அதன்பிறகு அவர்கள் அந்த யானையை தமிழக எல்லையோரம் உள்ள தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் விடுவித்தனர்.

பிடிபட்ட அரிசிக்கொம்பன் யானையின் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. இதன்மூலம் யானையின் நடமாட்டத்தை துல்லியமாக அறிய முடியும். பெரியாறு புலிகள் காப்பகத்தில், தமிழக – கேரள எல்லையில், கண்ணகி கோயில் செல்லும் நுழைவுப்பகுதிக்கு எதிரே 20 கி.மீ தூரத்தில் தேக்கடி நீர்தேக்க பகுதியின் கரைப்பகுதியான முல்லைக்கொடி பகுதியில் விடப்பட்ட இந்த யானை, தமிழக எல்லைக்குள் நுழைந்து ஜாலியாக உலா வருகிறது. தமிழக எல்லைக்குள் நுழைந்த அரிசிக்கொம்பன், இங்கும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது.

கடந்த 4ம் தேதி இரவங்கலாறு பகுதியில் உள்ள தொழிலாளி ஒருவரின் வீட்டில் கதவை உடைத்து அரிசி மூட்டையை இழுத்துச் சென்று தின்றது. 5ம் தேதி ஹைவேவிஸ் பகுதியில் விரட்ட வந்த வனத்துறையினரை அச்சுறுத்தி ஓட வைத்தது. 7ம் தேதி மேகமலை மலைச்சாலையில் உள்ள 10வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உலா வந்த அரிசிக்கொம்பன் யானையை, வெடி சத்தம் எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அன்று இரவு 11 மணியளவில் ஹைவேவிஸ் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை வழி மறித்து குலைநடுங்க வைத்தது.
இதனால் தற்போது 40 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரிசிக்கொம்பனை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வீடுகளில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், சுற்றுலாப் பயணிகள் மலைகளுக்கு செல்ல தடைவிதித்தும் தேனி கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

அரிசிக்கு அடிபோடும் ‘அரிசிக்கொம்பன்’
அரிசிக்கொம்பன் யானை கடந்த 6ம் தேதி தேக்கடி வழியாக தமிழக எல்லையான மேகமலை இரவங்கலாறு மலைப்பகுதிக்குள் நுழைந்தது. மணலாறு அணை பகுதிகளை சுற்றி ஹைவேவிஸ், மேகமலை, ஆனந்த எஸ்டேட், சில்வர் குடுசு, 10வது கொண்டை ஊசி வளைவு ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்தது. நேற்று முன்தினம் இரவு வெண்ணியாறு எஸ்டேட் பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடை தகர கதவை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அங்குள்ள மற்றொரு இரும்பு கதவை உடைக்க முடியாததால், யானை திரும்பியது. இதனால் அங்குள்ள அரிசி மூட்டைகள் தப்பின. அரிசிக்கொம்பன் அப்பகுதியில் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், சின்னமனூர் அருகே உள்ள தென்பழநி மலையடிவார பகுதியில் கடந்த 10 நாட்களாக வனத்துறையினர் மற்றும் போலீசார் என 40 பேர் குழுவினர் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். அரிசிக்கொம்பன் யானை கழுத்தில் ரேடியோ காலர் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதால், அதன் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

தமிழகத்திற்குள் எப்படி வந்தது?
அரிசிக்கொம்பன் யானையை பிடித்து பாலக்காடு பகுதியில் உள்ள வனத்தில் விடுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியதால் பாலக்காடு கொண்டு செல்லாமல் நிறுத்தப்பட்டது. இறுதியாக பெரியாறு புலிகள் சரணாலய பகுதியாக இருப்பதாலும் அங்கு ஆயிரம் ஏக்கருக்கு மேலாக புல் மேடாக இருப்பதால் அரிசிக்கொம்பன் எந்த தொந்தரவும் இல்லாமல் சுற்றி திரிவதற்கு வசதியாக இருக்கும் என்றும், வெளியில் நான்குபுறமும் சோலார் வேலியும் அமைக்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பாக இருக்கும் எனவும் முடிவு செய்து தேக்கடி நீர்தேக்க பகுதியில் யானையை விட்டனர். அதனால்தான் யானை தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளது.

‘வீட்டு கதவுகளை தட்டுகிறது’
மேகமலை தேயிலைத் தோட்டத் தொழிலாளி கருப்பசாமி கூறுகையில், ‘‘ஹைவேவிஸ் பகுதியில் உள்ள 7 மலை கிராமங்களில் 3 ஆயிரம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இருக்கிறோம். இங்கும் வனத்திற்குள் யானை கூட்டங்கள் அதிகம் இருக்கிறது. யாருக்கும் பெரிய அளவிற்கு தொந்தரவு எதுவும் இல்லை. தற்போது கேரளாவிலிருந்து வந்த அரிசிக்கொம்பன் யானை அட்டகாசத்தால் அனைவரும் பயந்துள்ளோம். குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் கதவுகளை தட்ட ஆரம்பித்துவிட் டது. அரிசிக்கொம்பனால் ஏதும் உயிர்பலி ஏற்படுவதற்குள் தமிழக வனத்துறையினர் பிடித்து மறுபடியும் கேரள வனத்திற்குள் விடவேண்டும்’’ என்றார்.

The post கேரளாவில் 2 ஆண்டுகளில் 12 பேரை காவு வாங்கிய காட்டுயானை அரிசிக்கொம்பன் ஆட்டம் ஆரம்பம்…? மலைப்பகுதியில் தேடுதல் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: