கேரளாவில் நிபா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு மலப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் உயிரிழந்தார். கேரளாவில் கடந்த 2018க்கு பின்னர் 5வது முறையாக மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. ஏற்கனவே நிபா பாதித்து கேரளாவில் 20 பேர் மரணமடைந்ததால் தற்போது இந்த நோய் பரவாமல் இருக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டார். அச்சிறுவனுக்கு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நோய் பாதித்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மலப்புரம் மாவட்டம் முழுவதும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. நோய் பாதித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ள கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் நாளை முதல் இந்த 2 பஞ்சாயத்துகளிலும் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் எனவும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு 50 பேருக்கு மேல் கூடுவதற்கும், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருந்துக் கடைகள் தவிர ஏனைய கடைகள் மற்றும் ஓட்டல்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். இந்த பஞ்சாயத்து பகுதிகளில் சினிமா தியேட்டர்களை மூடவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நிபா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கேனும் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் கீழே விழுந்து கிடக்கும் பழங்கள், பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது எனவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும் எனவும் மலப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

The post கேரளாவில் நிபா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: