கேரள – தமிழக எல்லையில் மர்ம விலங்கு தாக்கி ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு

*பொதுமக்கள் பீதி

பாலக்காடு : கேரள தமிழக எல்லையில் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அடுத்த எருத்தியாம்பதி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட சின்ன மூலத்தரை, பத்தாம் நம்பர் களம் கிராம பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் எருத்தியாம்பதி சின்ன மூலத்தரையை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் 5 ஆடுகள், 20 கோழிகள், ஜாபர் அலி என்பவரின் 2 ஆடுகள், பத்தாம் நம்பர் களத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் 4 ஆடுகள், 25 கோழிகள் ஆகியவற்றை மர்மவிலங்கு தாக்கி கொன்றது.

மேலும், மலையாண்டி கவுண்டனூரை சேர்ந்த ரமேஷ் என்பவரது ஒரு ஆடும், 5 வளர்ப்பு கோழிகளையும், சின்னப்பன் என்பவரின் வளர்ப்பு கோழிகளையும் மர்ம விலங்கு வேட்டையாடி தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து எருத்தியாம்பதி கால்நடை மருத்துவர்கள், வன அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மர்ம விலங்கு தாக்கி உயிரிழந்த வளர்ப்பு ஆடுகள், கோழிகள் பரிசோதனைக்கு பின்னர் புதைக்கப்பட்டது.

இதையடுத்து வன அதிகாரிகள் மர்ம விலங்கு குறித்து கால் பாதங்களின் அடையாளங்கள் சேகரித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சுற்றுவட்டார மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து மேலும் இப்பகுதியில் நடமாடும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கேரள – தமிழக எல்லையில் மர்ம விலங்கு தாக்கி ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: