கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் எழுத்துக்கள் அழிப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இங்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2,750 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் அங்கமாக கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 780 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முகப்பு உள்ளிட்ட 3 இடங்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேந்திர வித்யாலயா பள்ளி என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6ம் வகுப்பறை முகப்பில் மட்டும் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து பள்ளி முதல்வர் ஆறுமுகம் கூறுகையில், ‘நடப்பாண்டில் 6ம் வகுப்பில் 80 மாணவர்கள் படிப்பதால், 40 மாணவர்கள் வீதம் இந்த ஒரு வகுப்பை இரண்டாக பிரிப்பதற்கான அனுமதி கடந்த மாதம் கிடைத்தது. இதையடுத்து 6ம் வகுப்பு ஏ, பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏற்கனவே 7ம் வகுப்பு இருந்த இடத்தில் தற்போது 6ம் வகுப்பு பி பிரிவு இயங்கி வருவதால் 7ம் வகுப்பு என்ற அந்த எழுத்தை அழித்துவிட்டு 6ம் வகுப்பு என மாற்றுவதற்காக வர்ணம் கொண்டு அழிக்கப்பட்டது. அதை மீண்டும் எழுதுவதற்குள் இது போன்று பிரச்னை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

* ஒரே அறையில் 3 வகுப்புகளா?
தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படும் வகுப்பறையில் உள்ள 3 மொழிகளில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் கூறுகையில், ‘7ம் வகுப்பு அறையில் 6ம் வகுப்பு மாணவர்கள் அமர வைக்கப்பட்டதால் 6ம் வகுப்பு என மாற்றுவதற்காக வர்ணம் கொண்டு தமிழ் எழுத்துகள் அழிக்கப்பட்டது’ என்றார். ஆனால், அந்த அறையில் இந்தியில் 6ம் வகுப்பு என்றும், ஆங்கிலத்தில் 7ம் வகுப்பு என்றும் வெள்ளை பெயின்ட்டில் பளிச் என்று எழுதப்பட்டுள்ளது. தமிழில் எட்டாம் வகுப்பு என்று எழுதப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரே அறையில் மூன்று வகுப்புகள் நடக்கிறதா என சந்தேகம் எழுந்து உள்ளது.

The post கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் எழுத்துக்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: