கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு  மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா: நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபம் ஏந்தி சாமி தரிசனம்

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று இரவு கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா வடக்கு வாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், பலவகை மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு தீபராதனை நடந்தது.

இதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தர்பார் அலங்காரத்தில் காலை முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இரவு பம்பை, மேளதாளம் முழங்க வடக்குவாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஊஞ்சலில் அமர்ந்த அங்காளம்மனுக்கு பூசாரிகள் தாலாட்டு பாடல்கள் பாடிய போது எதிரில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்காயில் கற்பூர தீபம் ஏற்றி அம்மனை மனம் உருக வழிபட்டனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருக்கோயில் உதவியாளர் ஜீவானந்தம் அரகாவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மேலாளர் மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு  மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா: நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபம் ஏந்தி சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: