கர்நாடகா தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு மேலும் 2 எம்எல்ஏ பாஜவுக்கு முழுக்கு: மாநிலம் முழுவதும் அதிருப்தியாளர்கள் போராட்டம்; எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் முதல்வர் பொம்மை திணறல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். அதிகரித்து வரும் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முடியாமல் முதல்வர் பொம்மை உள்ளிட்ட பாஜ மூத்த தலைவர்கள் திணறி வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதனிடையே தேர்தலில் போட்டியிடும் 212 வேட்பாளர்கள் பட்டியலை ஆளும் பா.ஜ கட்சி இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளது. அதில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 7 பேருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. மீதமுள்ள 12 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் உள்பட பலரின் பெயர் அறிவிக்காமல் உள்ளது.

தற்போதைக்கு 7 பேருக்கு வாய்ப்பு கொடுக்காமல் தவிர்த்துள்ளதால், அதிருப்தி அடைந்த மாநில மீன்வளத்துறை அமைச்சர் எஸ்.அங்காரா, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் ஹாவேரி தொகுதி எம்எல்ஏ நேரு ஹோளேகர், முடிகெரே எம்எல்ஏ குமாரசுவாமி ஆகியோருக்கும் சீட் வழங்காமல் தவிர்த்துள்ளதால் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதுடன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதில் குமாரசாமி நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகருக்கும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கும் தனி தனியாக கடிதம் அனுப்பியுள்ளார். ஹோளேகர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருடன் கட்சியில் இருந்து விலகி விட்டார்.

மேலும் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாய்ப்பு கேட்டிருந்த மூத்த கட்சி தலைவர்களுக்கும் வாய்ப்பு வழங்காமல் இருப்பதால், பல முன்னாள் பேரவை, மேலவை உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜவில் இருந்து சாரை சாரையாக விலகி வருகிறார்கள். இப்படி விலகுபவர்கள் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் சேர்ந்து வருகிறார்கள். அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முடியாமல், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜ மூத்த தலைவர் திணறி வருகின்றனர். மேலும் சீட் கிடைக்காதவர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகங்கள் எதிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கட்சியில் எழுந்துள்ள அதிருப்தி அலையை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் கட்சி தலைவர்கள் தவித்து வருகிறார்கள். ஹாசன் மவாட்டம், அரசிகெரே தொகுதியில், பாஜ சார்பில் என்.ஆர்.சந்தோஷ் போட்டியிடுவதற்காக, கட்சி மேலிடத்தில் மனு கொடுத்து இருந்தார். ஆனால் அவருக்கு, சீட்டு கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த என்.ஆர்.சந்தோஷின் ஆதரவாளர்கள், பாஜ கொடியை தீ வைத்து எரித்தனர். மேலும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கர்நாடக பா.ஜவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  • கோயில், கோயிலாக சுற்றும் முதல்வர் பொம்மை

    கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் முதல்வர் பசவராஜ்பொம்மை கோயில் கோயிலாக சுற்றி வருகிறார். முதல்வர் பொம்மை கூறுகையில் சில எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். சிலர் ராஜினாமா செய்துள்ளனர். நாங்கள் அதை பேசி தீர்க்க முயற்சி செய்து வருகிறோம். நானும் அதிருப்தியாளர்களிடம் பேசுகிறேன். பிரச்னை தீர்க்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.
  • ஹெலிபேடு அருகே தீ முதல்வர் பொம்மை உயிர் தப்பினார்

    முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார். இதற்காக அவர், உடுப்பிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார். அங்கு தற்காலிக திறந்த வெளியில் ஹெலிகாப்டரை தரையிறக்க ஹெலிபேடு அமைக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் அங்கு சென்று ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும், அங்கிருந்து காரில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். அடுத்த சில நிமிடங்களில், ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் புற்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், உடனடியாக தீயை அணைத்தனர். முதல்வர் ஏற்கனவே பாதுகாப்பாக காரில் சென்றதல், அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்.
  • ராஜினாமா செய்த பிரபலங்கள்

    தும்மகுரு தொகுதி முன்னாள் எம்எல்ஏ சோகது சிவண்ணா கட்சியில் இருந்து விலகி விட்டார். அவர் ஏப்.20ல் தனியாக வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். உடுப்பி எம்எல்ஏ ரகுபதி பட் அதிருப்தியில் உள்ளார். ரேனேபென்னூர் தொகுதிக்கு விண்ணப்பித்த சங்கர் வாய்ப்பு கிடைக்காததால் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்து விட்டார்.ஹோசதுர்கா எம்எல்ஏ சேகர் வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக அல்லது முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் கல்யாண ராஜ்ய பிரகதி பரிட்சா கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.
  • பாஜ அலுவலகத்துக்கு பாதுகாப்பு

    பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியான நாளில் இருந்தே டிக்கெட் கிடைக்காத தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாஜ தலைமை அலுவலகத்துக்கும் கூட்டம், கூட்டமாக வந்து எங்கள் தலைவர்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் கோஷமிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் போராட்டக்காரர்களை ஒடுக்கும் வகையில், பெங்களூருவில் உள்ள பாஜ தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • காங்கிரசில் இணைகிறாரா முன்னாள் துணை முதல்வர்?

    முன்னாள் முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையில் துணைமுதல்வர் மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த லட்சுமண்சவதி, வரும் தேர்தலில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அதாணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அவருக்கு வழங்காமல் மகேஷ் குமட்டஹள்ளிக்கு வழங்கியதால், அதிருப்தி அடைந்துள்ள அவர், தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான கடிதத்தை இன்று பெங்களூருவில் மேலவை தலைவர் பசவராஜ்ஹொரட்டியை நேரில் சந்தித்து வழங்குவதாக பெலகாவியில் நேற்று தெரிவித்தார். மேலும் அடுத்தகட்ட அரசியல் நிலை குறித்து இன்று தெரிவிப்பதாக கூறினார். அவர் காங்கிரசில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இது பா.ஜ வட்டாரத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post கர்நாடகா தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு மேலும் 2 எம்எல்ஏ பாஜவுக்கு முழுக்கு: மாநிலம் முழுவதும் அதிருப்தியாளர்கள் போராட்டம்; எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் முதல்வர் பொம்மை திணறல் appeared first on Dinakaran.

Related Stories: