நாகர்கோவில் : கன்னியாகுமரி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 22 பேரும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 10 பேரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான நடைமுறையாக 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கின்ற பகுதிக்கே வாக்குச்சீட்டு மற்றும் பெட்டியுடன் சென்று தபால் வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் அடையாளம் காணப்பட்டு முதற்கட்டமாக அவர்களிடம் தபால் வாக்குப்பதிவுக்கு விருப்பம் உள்ளவர்களிடம் விபரங்கள் சேகரிக்கப்பட்டிருந்தது. இதற்காக படிவம் 12 டி வழங்கப்பட்டு விபரங்கள் பூர்த்தி செய்து பெற்றனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் 14 ஆயிரத்து 207 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.
இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரியில் 3831, நாகர்கோவிலில் 2709, குளச்சல் 2077, பத்மநாபபுரம் 2438, விளவங்கோடு 1651, கிள்ளியூர் 1501 பேரும் உள்ளனர். இதனை போன்று மாற்றுத்திறனாளிகள் 12 ஆயிரத்து 295 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இது சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி 2671, நாகர்கோவில் 1637, குளச்சல் 2496, பத்மநாபபுரம் 1718, விளவங்கோடு 1557, கிள்ளியூர் 2216 பேர் உள்ளனர்.
படிவம் 12 டி வழங்கப்பட்ட தகுதியான வாக்காளர்களில் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி 1343, நாகர்கோவில் 559, குளச்சல் 448, பத்மநாபபுரம் 849, விளவங்கோடு 510, கிள்ளியூர் 273 என மொத்தம் 3982 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்காக பதிவுசெய்ய இசைவு தெரிவித்தனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் கன்னியாகுமரி 725, நாகர்கோவில் 293, குளச்சல் 388, பத்மநாபபுரம் 548, விளவங்கோடு 335, கிள்ளியூர் 257 என மொத்தம் 2546 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்காக பதிவுசெய்ய விருப்பம் தெரிவித்தனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்கு அளிக்க 2546 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3982 பேரும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெற 119 சிறப்பு குழுக்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நேற்று காலை முதல் வாக்காளர்களை வீடு தேடி சென்று வாக்குபதிவை நடத்தினர். மின்னணு வாக்குபதிவு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குபெட்டி எடுத்து செல்லப்படுகிறது. காவல் துறை அலுவலர்கள், நுண் பார்வையாளர் மற்றும் வீடியோகிராபர் ஆகியோர் உடன் செல்கின்ற நிலையில் வாக்குபதிவு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவிலும் பதிவு செய்யப்படுகிறது. முன்னதாக வாக்காளர்களுக்கு வாக்குபதிவு நடவடிக்கைகள் விளக்கப்பட்டு அதன் பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடத்தட்டுவிளை பாகம் 227, புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளி வாக்காளரான பண்டாரக்காட்டை சேர்ந்த ராமசாமி (78) மற்றும் அதே பகுதியை சார்ந்த 92 வயது பூர்த்தியடைந்த கார்லூயிஸ் ஆகியோர் தபால் வாக்களித்ததை நேரில் பார்வையிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படும் தபால் வாக்குப்பதிவு பெட்டிகளை அந்ததந்த தாலுகா அலுவலங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உதவி தேர்தல் அலுவலர் கனகராஜ், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் சாந்தி, கல்குளம் முருகன், தேர்தல் அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்றும் இந்த தபால் வாக்குபதிவு நடத்தப்படுகிறது. விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 10 தேதி தபால் வாக்கு பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு செய்யவரும் குழுவின் வருகையின் போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் அளித்து 2ம் முறையும் இக்குழு வருகை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில் வாக்குப்பதிவு குழு மீண்டும் வருகை தரமாட்டார்கள் எனவும், அத்துடன் தபால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கன்னியாகுமரி மக்களவை தேர்தல்- விளவங்கோடு இடைத்தேர்தல் குமரியில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.