உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலே இலக்கு; கான்பூர் டெஸ்டிலும் கலக்குமா இந்தியா?.. ‘3 சுழல்’ வியூகத்துக்கு வாய்ப்பு


கான்பூர்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் 4 வெற்றிகளே தேவை என்ற நிலையில், வங்கதேச அணியுடன் கான்பூரில் நடக்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வெற்றி முனைப்புடன் தயாராகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் இரு அணி வீரர்களும் நேற்று கான்பூர் வந்து சேர்ந்தனர்.

ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுடன் தொடர்ச்சியாக விளையாட உள்ள டெஸ்ட் தொடர்களில், இந்திய அணி கணிசமான வெற்றிகளைக் குவித்தால் தொடர்ந்து 3வது முறையாக உலக டெஸ்ட் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடைசியாக விளையாடும் 10 டெஸ்ட்களில் 5 வெற்றிகள் தேவை என்ற நிலையில், ஏற்கனவே சென்னையில் ஒரு வெற்றியை பதிவு செய்துவிட்டதால் இந்திய அணி மேலும் உற்சாகம் அடைந்துள்ளது. கான்பூர் டெஸ்ட் முடிந்ததும், சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதும் இந்தியா, அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று மிகக் கடினமான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த நிலையில், கான்பூரில் நாளை மறுநாள் தொடங்கும் 2வது டெஸ்டிலும் வெற்றியை வசப்படுத்த இந்திய அணி வீரர்கள் வரிந்துகட்டுகின்றனர். சென்னை மைதானத்தின் செம்மண் ஆடுகளம் ரன்குவிப்பு மற்றும் விக்கெட் வேட்டை என இரண்டுக்குமே சாதகமாக இருந்த நிலையில், கான்பூரில் கறுப்புக் களிமண் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பந்து அதிகம் எழும்பி வராது என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும்.

எனவே, இந்த போட்டியில் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் வாய்ப்பு அதிகம். சென்னை டெஸ்டில் அஷ்வின், ஜடேஜா அமர்க்களமாகப் பந்துவீசிய நிலையில், அவர்களுடன் இணைந்து சுழல் தாக்குதலை நடத்த குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் தேர்வு செய்யப்படலாம். 1996ல் இருந்து 2021 வரை கான்பூரில் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு தோல்வியை கூட சந்தித்தது இல்லை என்பது (5 வெற்றி, 2 டிரா) குறிப்பிடத்தக்கது.

* கான்பூரில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் நடைபெற உள்ள நிலையில், கிரீன் பார்க் ஸ்டேடியம் முன்பாக சில அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் (அக்.1-5) ரஞ்சி சாம்பியன் மும்பை அணியுடன் மோதவுள்ள இதர இந்திய அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இதர இந்தியா: ருதுராஜ் கெயிக்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), கலீல் அகமது, ரிக்கி புய், ராகுல் சாஹர், இஷான் கிஷன், சரண்ஷ் ஜெயின், துருவ் ஜுரெல், முகேஷ் குமார், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா, ஷாஸ்வத் ராவத், சாய் சுதர்சன், மானவ் சுதர், யஷ் தயாள்.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலே இலக்கு; கான்பூர் டெஸ்டிலும் கலக்குமா இந்தியா?.. ‘3 சுழல்’ வியூகத்துக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: