இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்- கலைஞானி கமல்ஹாசன் சாரை நேற்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்” என பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் மநீம இடம்பெற்றது.
அப்போது, மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் அளிக்கப்படும் என திமுக சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று முன்தினம் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரிலேயே கமல்ஹாசனை பி.கே.சேகர்பாபு சந்தித்துப் பேசியுள்ளார். மாநிலங்களவை இடம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின்-கமல்ஹாசன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
The post கமல்ஹாசனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு appeared first on Dinakaran.