நாளை 5ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவை போற்றுவோம்: மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச்சங்க தலைவர் ரெ.தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். கலைஞர் ஆட்சி காலத்தில் உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என பெயர் மாற்றம் செய்து மகுடம் சூட்டி மகிழ்ந்தார். மேலும் தனித்துறை, தனி நலவாரியம் அமைத்து தந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வு மலர இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்.

தமிழகம் முழுவதும் சென்றுவர பேருந்து கட்டண சலுகை, 2 மடக்கு கல்வி உதவித்தொகை, விடுதியில் தங்க பயிலும் மாணவர்களுக்கு உணவு கட்டணம் உயர்த்தி வழங்கினார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குதல், தொழில் துவங்க மானியத்துடன் வங்கிக்கடன் வசதி, கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் கலைஞர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்று திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம், இலவச ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். கலைஞர் எப்படி செயலாற்றினாரோ அதேபோல முதல்வர் இந்த துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி மாற்றுத்திறனாளர்கள் சிரிப்பில் கலைஞரை கண்டு வருகிறார். முதல்வருக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

The post நாளை 5ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவை போற்றுவோம்: மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: