தலைநகர் டில்லி யமுனை நதிக்கரையில், சுமார் முப்பது ஏக்கர் நிலப்பரப்பில், டில்லி நிஜாமுதீன் பாலத்திற்கு அருகில் எழிலுற அமைந்துள்ளது, ‘அக்ஷர்தாம் சுவாமி நாராயணன் திருக்கோயில் காண்போரை பிரமிக்க வைக்கும் கலைக்கோயில்! ‘அக்ஷர்தாம்’ என்றால் பிரம்மாண்டமான கலைக் கோயில் என்று பொருள். இந்தியாவில் காந்தி நகர், அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் அக்ஷர்தாம் கோயில்கள் அற்புதமாக அமைந்துள்ளன. இவற்றுள் ஒன்றாக பிரமிக்க வைக்கும் டில்லி நிஜாமுதீன் அக்ஷர்தாம் சுவாமி நாராயணன் கோயில் மிகவும் புகழ்மிக்கது. ‘சுவாமி நாராயணர்’ என அழைக்கப்பட்ட விஷ்ணு பக்தர், அயோத்திக்கு அருகில் உள்ள ‘சாப்பையா’ என்ற குக்கிராமத்தில் கி.பி.1781-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் நாள் அந்தணர் குலத்தில் பிறந்தார்.
அவர் தம் இளம் வயதிலேயே வேதசாஸ்திரம், உபநிடதங்கள், பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் என்று அனைத்தும் கற்று மேதையாக விளங்கினார். இல்லறத்தைத் துறந்து, ஆன்மிக வாழ்வில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். பாதயாத்திரையாக பாரத மெங்கும் பயணம் செய்து, பல திருத்தலங்களை தரிசனம் செய்தார். ஏழு ஆண்டுகள் இவ்வாறு பாத யாத்திரை புரிந்து இறுதியாக குஜராத் வந்தடைந்தார். அங்கே 500-க்கும் மேற்பட்ட சீடர்களைக் கொண்டு ‘சுவாமி நாராயணன் ஸம்ப்ராடே’ என்னும் ஆன்மிக அமைப்பை ஏற்படுத்தினார்.
அதிசயிக்கும் சிற்பங்கள்
இதன் மூலம் மக்களுக்குத் தொண்டாற்றினார். பாமர மக்களுக்குப் பல நல்லுப தேசங்களை வழங்கினார். குறிப்பாக, ஆன்மிக வாழ்விற்கு ஒழுக்கம் மிகமிக அவசியம் என்பதை வலியுறுத்தி வந்தார். மக்கள் அவரின் அறிவுரைகளைப் பின்பற்றினர். ஐம்பது வயது வரை வாழ்ந்த அவர், பிரம்மாண்டமான ஆறு அக்ஷர்தாம் நாராயணர் கோயில்களைக் கட்டி ‘அட்சர புருஷோத்தம வேத தத்துவ வழிபாடு’ என்கின்ற நெறிமுறையை ஏற்படுத்தி, தமது உபதேசங்களை ‘வசனாம்ருதம்’ என்னும் நூலாக எழுதி மக்களிடையே பரவச் செய்தார்.அவர் வாழ்வின் இறுதிக் காலம் வரையிலும் உபதேசம் செய்வதிலும், அக்ஷர்தாம் ஆலயங்கள் கட்டுவதிலுமே ஓயாமல் பணியாற்றினார். ‘மக்களைவிட்டு ஒரு போதும் நான் விலகமாட்டேன்.
ஆன்மிக குருமார் களின் வடிவில் நான் எப்போதும் நிரந்தரமாக இப்பூவுலகில் இருப்பேன்’ என்று
கூறியபடியே சித்தி பெற்றார்.உலகம் முழுவதும் இந்த குருதேவருக்கு, 8100 ஆன்மிகக் கிளைகள் இயங்கி வருகின்றன. மது, மாமிசம், கூடாவொழுக்கம் ஆகியவை பரம எதிரிகள். மனம், சொல், செயல் மூன்றாலும் தூய்மையுடன் இருப்பதே ஒவ்வொருவருக்கும் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று நாராயணரின் போதனைகளை நாடெங்கும் உள்ள கிளைகள் போதித்து வந்தன. இவரது போதனைகளைப் பரப்பும் விதத்தில் நாடெங்கும் சுவாமி நாராயண் கோயில்களை அமைக்கப்பட்டுள்ளது. டில்லி சுவாமி நாராயண் கோயிலில் எழில் மிக்க கலை நயம் நிறைந்த நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. முதல் வாயிலுக்கு ‘பக்தி துவார்’ என்று பெயர். இதில் பல நுணுக்கமான கலை அம்சங்கள் கொண்ட 208 சிற்பங்கள் ரம்மியமாக செதுக்கப்பட்டுள்ளன.
மயக்கவைக்கும் மயூர் துவார்
இரண்டாவதாக ‘மயூர் துவார்’ வாயில் உள்ளது. இங்குள்ள இரட்டை வாயிலில் மயில்கள் உயிருடன் இருப்பது போன்று தத்ரூபமாக உள்ளது. இங்கு நுணுக்கமான கலையம்சம் நிறைந்த 869 சிற்பங்கள் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன. ‘மயூர் துவார்’ எனப்படும் மயில் நுழைவு வாயிலில் கோயிலை உருவாக்கிய சுவாமி நாராயணரின் நினைவாக இருபாதச் சுவடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாத சுவட்டின் நான்கு புறமும் ஊற்றுப் போல் குளிர்ந்த நீர் விழுந்து கொண்டிருக்கிறது.
கருவறையை மையமாகக் கொண்டுள்ள பிரதான கோயில் 315-அடி நீளம், 275 அடி அகலம், 129 அடி உயரம் என்ற அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோயில் மண்டபம் இளஞ்சிவப்பு மணற்பாறை மற்றும் வெள்ளைப் பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 148 யானைகள், விதவிதமான தோற்றங்களில் பல மனிதர்கள், பலவிதமான விலங்குகளின் சிற்பங்கள் இயற்கையான கோலங்களில் மிகவும் நேர்த்தியாகக் காட்சியளிக்கின்றன. சுவாமி நாராயணன் கோயிலின் பிரம்மாண்டமான மண்டபத்தைத் தாங்கி நிற்கும் ஏராளமான தூண்களில் இறைவனின் 200-க்கும் மேற்பட்ட வடிவங்கள் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கின்றன. மேலும், ஒன்பது வட்ட வடிவ சிகரங்களில் 20,000க்கும் அதிகமான, நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
திருக்கோயிலின் நடுநாயமாக 11அடி உயரத்தில் சுவாமி நாராயணரின் திருவுருவம் நின்ற திருக்கோலத்தில் தங்கக் கவசத்தில் பளபளக்கிறது. மற்றொரு பக்கத்தில் சுவாமி நாராயணன் ஆடை அணிமணிகள் பூரண அலங்காரத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவரைச் சுற்றி நான்கு திசைகளிலும் வட்ட வடிவமாக ராதா கிருஷ்ணர், சிவன்-பார்வதி, சீதாராமர், லட்சுமிநாராயணர் தம்பதி சமேதராக இருக்கும் அற்புத வடிவங்கள் எல்லாம் பளிங்குக் கற்களில் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலில் பல சிற்ப மண்டபங்கள் உள்ளன. 65 அடி உயரம் உள்ள லைலா மண்டபம், பக்த மண்டபம், ஸ்மிருதி மண்டபம், பரமஹம்ச மண்டபம் ஆகியவை ஏராளமான சிற்பங்களுடன் காட்சியளிக்கின்றன.
நாராயண தடாகம்
இம்மண்டபங்களின் வெளிப்புறச் சுவரில் 611- அடி சுற்றளவில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பேளூர், ஹளபேடு, சோம்நாத் போன்ற இடங்களில் உள்ள புகழ் பெற்ற சிற்பங்களுடன் அமைந்துள்ள கோயில்களைப் போலவே டில்லி சுவாமி நாராயணர் கோயிலிலும் 4287-சிற்பங்கள் உள்ளன. இதில் பல வடிவங்களில் காட்சி தரும் விநாயகப் பெருமானின் 48 திருமேனிகள் உள்ளன. இதிகாச புராணங்களில் சொல்லப்படும் 200-மாமுனிவர்களின் அழகிய சிற்ப வடிவங்கள் உள்ளன.
முப்பெருந்தேவியரான மகாபார்வதி, மகாசரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரின் பளிங்குச் சிலைகள் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.இங்குள்ள அபிஷேக மண்டபத்தில் குழந்தை யோகி நீல கண்ட வார்னியின் அழகிய சிலை உள்ளது. இச்சிலைக்கு கங்கை நீரால் நாள்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதைச்சுற்றி சிவப்புக் கற்களால் ஆன 3000-அடி நீளமும், 1152 தூண்களும் கொண்ட இரண்டுக்கு மண்டபம் உள்ளது. அதில் 145 ஜன்னல்கள் உள்ளன. ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. சுவாமி நாராயண் கோயில் பீடத்தின் அடியின் மூன்று பக்கமும் வரிசையாக கலையம்சங்களுடன் 108-கோ முகங்கள் உள்ளன.
அவற்றில் ஊற்றுபோல நீர் விழுந்த வண்ணம் இருக்கிறது. இதனால் கோயிலைச் சுற்றி தடாகம் போலக் காட்சி தருகிறது. இதை ‘நாராயண தடாகம்’ என்கிறார்கள். இத்தடாகத்தில் சுவாமி நாராயணர், திருத்தல யாத்திரை மேற்கொண்ட போது விஜயம் செய்த இடங்களில் உள்ள 51-நதி களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் ‘சனிஸ் கிருதி விஹார்’ என்னும் 15-நிமிடப்படகு சவாரி உண்டு.
சவாரியின் போது சரஸ்வதி நதிக்கரையிலிருந்து இந்தியப் பண்பாட்டை பிரதிபலிக்கும் தட்ச சீலம் பல்கலைக்கழகம், வேதகால கிராமங்கள், கடைவீதிகள் ஆகியவற்றைக் காணலாம். உலகெங்கிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் தினமும் பல்லாயிரக்கணக்கில் வருகை தந்து சுவாமி நாராயணரைத் தரிசித்து மகிழ்கிறார்கள். அற்புதமான கட்டடக் கலையுடன் காட்சி தரும் இத்திருக்கோயில் டில்லியின் மணி மகுடம் போல் பிரகாசிக்கிறது.
தினமும், இத்திருக்கோயில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். அக்டோபர் – மார்ச் வரை மட்டும் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.எப்படி செல்வது: டில்லியில் இருந்து சுமார் 31 கி.மீ., தூரத்தில் பயணித்தால் இந்த கோயிலுக்கு வந்துவிடலாம். புதுடில்லியில் இருந்து 10 கி.மீ., தொலைவிலும் இருக்கிறது.
டி.எம்.ரத்தினவேல்
The post காண்போரை பிரமிக்க வைக்கும் கலைக்கோயில் appeared first on Dinakaran.