பல மொழிகள் பேசும் இந்தியாவின் மீது ஒற்றை மொழியை திணிக்க பாஜக முயற்சி: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: பல மொழிகள் பேசும் இந்தியாவின் மீது ஒற்றை மொழியை திணிக்கும் பாஜக ஆட்சியின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அலுவல் மொழிகளுக்கான 38வது நாடாளுமன்றக் குழு கூட்டம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் அலுவல் மொழிக்கான 12வது அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் பேசிய அமித்ஷா, இந்தியை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். மேலும் எந்த ஒரு மாநிலத்தின் மொழியுடனும் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து இந்திய மொழிகளையும் ஏற்றுக் கொண்டால் தான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

இந்நிலையில், அமித்ஷா பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தி மொழியை திணிக்க பாஜக முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; தேசிய மொழிகள் உள்ளூர் மொழிகள் என்றும், காலப்போக்கில் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என விஷம் கக்கியுள்ளார். இந்தி மொழியை தனது அரசியல் ஆயுதமாக்கி குறுகிய லாபமடையும் நோக்கில் செயல்படுகிறது. அதன் ஒருபகுதியாகவே இந்தி மொழியை பேசாத மக்கள் மீதும் அதனை கட்டாயமாக திணிக்கும் பல முயற்சிகளை மேற்கொள்கிறது.

பாஜக ஆட்சி ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற திசையில் பயணிக்கிறது. சமஸ்கிருதமே அனைத்து மொழிகளின் தாய் என்று அறிவியலுக்கே விரோதமான கருத்தை பாஜக முன்வைக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவதாக ஒரு மொழி கற்பது கட்டாயம் என்றும் பாஜக திணிக்கிறது. இதே திசையில் ஒன்றிய அரசு பயணித்தால் எப்பாடுபட்டாவது போராடி தடுப்போம்; அனுமதிக்க மாட்டோம். பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக இந்தியாவை சிதைக்கும் இந்த முயற்சிகளுக்கு இடம் தர மாட்டோம். பன்முக இந்தியாவையும், மொழி சமத்துவத்தையும் பாதுகாப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பல மொழிகள் பேசும் இந்தியாவின் மீது ஒற்றை மொழியை திணிக்க பாஜக முயற்சி: கே.பாலகிருஷ்ணன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: