×

கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது

பாரிஸ்: ஜூலை 26-ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. நிறைவு நாளான இன்று 13 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது. பதக்கங்களுக்கான அனைத்து போட்டிகள் முடிந்தபின் இன்றிரவு 12.30 மணி அளவில் பிரமாண்டமான நிறைவு விழா நடைபெற உள்ளது.

33வது ஒலிம்பிக் பாரிஸில் கடந்த ஜூலை 26ம் தேதி தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக்கில் 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இம்முறை ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன. இந்தியாவில் இருந்து 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் நேற்று வரை இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனுபாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆடவர் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். ஆடவருக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில் கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் முடிவடைகிறது. நிறைவு நாளான இன்று 13 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான மராத்தான், ஆடவருக்கான வாலிபால், மகளிர் கூடைப்பந்து, மகளிர் வாலிபால், மகளிர் நவீன பென்டத்லான் மற்றும் ஆடவர், மகளிர் மல்யுத்த போட்டிகள் நடைபெறுகின்றன.

பதக்கங்களுக்கான அனைத்து போட்டிகள் முடிந்தபின் இன்றிரவு 12.30 மணி அளவில் பிரமாண்டமான நிறைவு விழா நடைபெற உள்ளது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை மனு பாக்கர், பி.ஆர்.ஸ்ரீஜேஷம் ஏந்திச் செல்கின்றனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் பெற்று பதக்க பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது.

The post கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது appeared first on Dinakaran.

Tags : Paris Olympic Games ,Paris ,Paris Olympics ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...