×

அனைத்து தரப்பான வழக்குகளிலும் திறம்பட வாதிடும் திறமை படைத்தவர் : மறைந்த நீதிபதி சத்ய நாராயண பிரசாத்-க்கு முதல்வர் புகழஞ்சலி

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி J. சத்ய நாராயண பிரசாத் அவர்களின் மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி J. சத்ய நாராயண பிரசாத் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய தனது தந்தையின் வழியில் சட்டத்துறையை தேர்வு செய்து, வழக்கறிஞராகி, அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பான வழக்குகளிலும் திறம்பட வாதிடும் திறமை படைத்தவர்.

வழக்கறிஞராக நீண்ட அனுபவத்துடன் 2021-இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். நீதித்துறையில் மேலும் தனது சிறந்த பங்களிப்பை, சாதனைகளைப் படைக்க வேண்டிய தருணத்தில் நிகழ்ந்து விட்ட அவரது எதிர்பாராத மறைவு நீதித்துறைக்கும் – நீதி பரிபாலன முறைக்கும் பேரிழப்பாகும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாருக்குக் காவல்துறை அணிவகுப்புடன் கூடிய இறுதி மரியாதை செலுத்தப்படும். பணியில் இருக்கும் நீதிபதி ஒருவரை இழந்து வருந்தும் சக நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அனைத்து தரப்பான வழக்குகளிலும் திறம்பட வாதிடும் திறமை படைத்தவர் : மறைந்த நீதிபதி சத்ய நாராயண பிரசாத்-க்கு முதல்வர் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Justice ,Sathya Narayana Prasad ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Madras High Court ,Judge ,J. Sathya Narayana Prasad ,Tamil Nadu government ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!