சிறையில் இருந்து ஜாமீனில் வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு விடிய விடிய தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருமலை: சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சந்திரபாபு நாயுடுக்கு தொண்டர்கள் விடிய விடிய உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அவர் 14 மணி நேரத்திற்கு பிறகு இன்று காலை தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.  ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடு, கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரையிலான தனது ஆட்சியின்போது இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தில் நிதிமோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரபாபுவை கடந்த செப்டம்பர் 9ம் தேதி கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். அவர், தனது உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீன் கேட்டு ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

அடுத்த மாதம் 24ம் தேதி வரை சந்திரபாபுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 10ம்தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் இடைக்கால ஜாமீன் கிடைத்ததால் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். அவரது கட்சியினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி அடைந்தனர். 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபுநாயுடு நேற்று மாலை 4.30 மணியளவில் வெளியே வந்தார். அங்கிருந்து காரில் குண்டூர் மாவட்டம் உண்டவல்லியில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்பளித்தனர். சிறை வளாகத்தில் இருந்து தனது வீடு வரை தொண்டர்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து மலர்களை தூவி விடியவிடிய வரவேற்பு அளித்தனர்.

மேலும் தொண்டர்கள் சந்திரபாபுநாயுடுவை பார்த்து உற்சாகத்துடன் கோஷமிட்டனர். சுமார் 14 மணி நேரம் காரில் பயணம் செய்து தொண்டர்களின் மகிழ்ச்சியை ஏற்றுக்கொண்ட சந்திரபாபுநாயுடு இன்று காலை சுமார் 6.30 மணியளவில் உண்டவல்லியில் உள்ள தனது வீட்டை அடைந்தார். அங்கு அவரது மனைவி புவனேஸ்வரி ஆரத்தி எடுத்து வரவேற்றார். குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் சந்திரபாபுநாயுடுவை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். ஜாமீனில் வந்த நிலையில் இன்று மாலை சந்திரபாபுநாயுடு, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திட்டமிட்டார். அதன்படி இன்றிரவு அவர் குடும்பத்துடன் திருமலைக்கு வந்து தங்குகிறார். நாளை காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். பின்னர் ரேணிகுண்டாவில் இருந்து ஐதராபாத் புறப்படுகிறார்.

The post சிறையில் இருந்து ஜாமீனில் வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு விடிய விடிய தொண்டர்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: