×

ஜாபர் சேட் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: ஜாபர் சேட் வழக்கு விவகாரத்தில் உயர் நீதிமன்றத்துக்குமீண்டும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும் இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், “சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதித்து, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

அதேபோன்று இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அதனை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கவோ அல்லது தீர்ப்பு வழங்கவோ கூடாது என்று இடைக்கால தடை விதித்து கடந்த 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

இந்த விவகாரத்தில் கூடுதல் அம்சங்களை விசாரிக்க வேண்டும் என்பதால் விசாரணையை வரும் நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அதுவரை உயர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும். அதே போன்று இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பின் விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது.

மேலும் இந்த வழக்கில் ஜாபர் சேட் தரப்பு வாதங்களை எதனையும் கேட்காமல், அமலாக்கத்துறையின் வாதங்களை மட்டுமே கேட்டு விட்டு தீர்ப்பை ஏன் சென்னை உயர் நீதிமன்றம் ஏன் ஒத்திவைத்தது. விசாரணை என்பது இரு கோணத்திலும் சரியானதாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும் தீர்ப்பை ஒத்தி வைத்து விட்டால், நீதிமன்றம் கட்டாயம் அதனை நிச்சயம் வழங்கிதான் ஆக வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர். இதில் ஜாபர் சேட் வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கைக்கு கடந்த 30ம் தேதி உச்ச நீதிமன்றம் முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ஜாபர் சேட் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,High Court ,Jaber Chet ,Ram Shankar ,Jaber Sade ,Dinakaran ,
× RELATED கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில...