கடும் வெயில் எதிரொலி கல்லட்டி மலைப்பாதையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி : கடும் வெயில் காரணமாக வனத்துறை சார்பில் கல்லட்டி மலைப்பாதையில் கவுண்டர் பயர் முறையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. மேலும் தேக்கு, ஈட்டி உட்பட விலையுர்ந்த மரங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளிட்டவை உள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் வரை மழை நீடித்த நிலையில், வனங்கள் பசுமையாக காட்சியளித்தது. நீர் நிலைகளிலும் நீர் இருப்பு இருந்தது. இந்த சூழலில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து உறைபனி பொழிவு துவங்கியது. கடந்த ஆண்டுடை காட்டிலும் இம்முறை உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

இதனால் வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், புல்வெளிகள், மரங்கள் காய்ந்து கருகின. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதன்காரணமாக, வனங்களில் காட்டு தீ ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. இதனை ெதாடர்ந்து வனத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பகல் நேரங்களில் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடியில் இருந்து ஊட்டி வரும் கல்லட்டி மலைப்பாதையில் பைசன்வேலி, கல்லட்டி சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் கவுண்டர் பயர் முறையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளில் வன ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகம் பயணிப்பதால், இவ்வழியாக பயணிக்க கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என வனத்துறை வலியுறுத்தி உள்ளது.

The post கடும் வெயில் எதிரொலி கல்லட்டி மலைப்பாதையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: