வாரிசு சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வாரிசு சான்றிதழில் பெயர் இல்லாததால், உரிய விசாரணை இன்றி வாரிசு சான்றிதழ் வழங்கிய தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் மற்றும் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் கிராமம் பழைய காலனியில் வசித்து வருபவர் குமார் (43). இவர் நேற்று கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் கோட்டாட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, போந்தவாக்கம் கிராமத்தில் வசித்து வந்து தற்போது ஆந்திர மாநிலம் தடாவில் வேலை செய்து வருகிறேன். எங்கள் குடும்பத்தில் தாய் பிச்சம்மாள், அண்ணன் யுவராஜ், தங்கை பூர்ணிமா குமார், தம்பி சிவா ஆகியோர் உள்ளனர். எனது தந்தை முனுசாமி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 13ம் தேதி இறந்து விட்டார்.

இதில் எனது அண்ணன் யுவராஜ், தந்தை இறந்த பிறகு ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வாங்கியுள்ளார். அதில் யுவராஜ் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவர் பெயர்கள் மட்டுமே வாரிசுகள் என என் தாயார் பிச்சம்மாள் மனு கொடுத்தது போல் சான்றிதழ் வாங்கியுள்ளார். அதில் எனது பெயரும், எனது தம்பி சிவா பெயரும் இல்லை. விசாரணை ஏதும் இன்றி வாரிசு சான்றிதழ் கொடுத்த அப்போதைய தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர், விஏஒ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலியான வாரிசு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இந்த மனுவை ஊத்துக்கோட்டை பொறுப்பு தாசில்தார் லதாவிடம் நேரிலும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் அனுப்பியுள்ளார். அப்போது குமாரின் தம்பி சிவா மற்றும் வக்கில் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post வாரிசு சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: