- இந்தியா
- காங்கிரஸ்
- கம்யூனிஸ்டுகள்
- கேரளா
- திருவனந்தபுரம்
- இந்தியா கூட்டணி
- மோடி
- பினராயி விஜயன்
- மார்க்சிஸ்ட் கட்சி
- மார்க்சிஸ்ட்
திருவனந்தபுரம்: இந்தியா கூட்டணியில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் அகில இந்திய அளவில் ஒற்றுமையாக இருந்தாலும் கேரளத்தில் எதிரும் புதிருமாகவே உள்ளனர். ஆனால், மோடியை அகற்ற வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. இங்கு மொத்தம் 20 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இடதுசாரி கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 வேட்பாளர்களையும், கேரளா காங்கிரஸ் (எம்) ஒரு வேட்பாளரையும் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்த கட்சியின் மாநில செயலாளர் பி.கோவிந்தன் வேட்பாளர் பட்டியலை திருவனந்தபுரத்தில் வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு: ஆற்றிங்கல்-ஜோய், கொல்லம்-நடிகர் முகேஷ், பத்தனம்திட்டா-தாமஸ் ஐசக், ஆலப்புழா ஆரிப், இடுக்கி-ஜோய்ஸ் ஜார்ஜ், எர்ணாகுளம் ஷைன், சாலக்குடி-ரவீந்திரநாத், பாலக்காடு-விஜயராகவன், ஆலத்தூர்-ராதாகிருஷ்ணன், பொன்னானி-ஹம்சா, மலப்புரம்-வசீப், கோழிக்கோடு எளமரம் கரீம், வடகரை-கே.கே. ஷைலஜா, கண்ணூர்-எம். வி.ஜெயராஜன், காசர்கோடு-எம்.வி. பாலகிருஷ்ணன்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு 20ல் ஒரே ஒரு தொகுதி மட்டும் தான் கிடைத்தது. எனவே இம்முறை பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கட்சியின் மிக முக்கியமான பிரமுகர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். 15 வேட்பாளர்களில் ஒரு பொலிட் பீரோ உறுப்பினர், 4 மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், ஒரு அமைச்சர், ஒரு மேலவை எம்பி, 3 எம்எல்ஏக்கள் மற்றும் இக்கட்சியின் 3 மாவட்ட செயலாளர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்துதான் ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை அவர் கேரளத்தில் களம் இறங்குவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், கேரள காங்கிரஸ் கட்சியின் மீண்டும் ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதி கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியின் கைவசம் உள்ளது. கடந்த 3 தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சசி தரூர் தான் வெற்றி பெற்று உள்ளார்.
இதுவரை இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும் சசி தரூருக்குத் தான் கூடுதல் வாய்ப்பு என்று கூறப்படுகிறது. கேரளாவில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இடதுசாரி கூட்டணி அறிவித்து பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜ கூட்டணி வேட்பாளராக ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவிக்கப்பட்டார். அவரும் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். கடந்த 2009க்குப் பின்னர் திருவனந்தபுரம் தொகுதியில் இடது முன்னணி வெற்றி பெறவில்லை. கடைசியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பன்யன் ரவீந்திரன் தான் இங்கு வெற்றி பெற்றிருந்தார். அவர்தான் இந்த முறையும் இங்கு போட்டியிடுகிறார். மூத்த தலைவர் என்பதாலும், அனைவருக்கும் முன்பாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாலும் இந்த முறை தங்களுக்குத் தான் வெற்றி என்று இடது முன்னணி கருதுகிறது. ஆனால் கடந்த தேர்தலில் 2வது இடத்திற்கு முன்னேறியதால் இந்த முறை ஒன்றிய அமைச்சரை களத்தில் இறக்கி முதன்முதலாக தாமரையை மலர வைக்க பாஜ திட்டமிட்டுள்ளது.
The post இந்தியா கூட்டணி கட்சிகள் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட்கள் நேருக்கு நேர் மோதும் கேரளம்: பெருந்தலைகளை களமிறக்கிய மார்க்சிஸ்ட் appeared first on Dinakaran.