குடும்பமாக வசிப்பதுதான் இந்திய கலாச்சாரம் மகளை தந்தை அழைத்து செல்வது கடத்தலாகாது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: ‘ குடும்பமாக வசிப்பதுதான் இந்திய கலாச்சாரம். மகளை, தந்தை அழைத்துச் சென்றதை கடத்தலாக கருத முடியாது’ என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த பிரபாதேவி, காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின்போது கண்ணதாசன் என்பவர் ஆஜராகி, ‘‘மனுதாரரின் கணவர் நான். எனது மகளை அழைத்துச் சென்றேன். கடத்தவில்லை. மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.

இதற்கு மனுதாரர் ஒத்துழைக்கவில்லை. சில நாட்கள் குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், குழந்தைகளை சந்திக்க என் மனைவி வீட்டார் அனுமதிப்பதில்லை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘எத்தனையோ சம்பவங்களில் உடனடியாக வழக்கு பதிவதில்லை. மகளை அவரது தந்தை அழைத்து சென்றதற்காக கடத்தல் வழக்கு பதிவு செய்தது ஏற்புடையதல்ல’’ என்றனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பெற்றோர்-குழந்தைகள், முதியவர்களுடன் குடும்பமாக வசிப்பதுதான் இந்திய கலாச்சாரம்.

குழந்தைகளை பிரித்துவிட்டு, அந்த நபரை தனிமையில் விட்டுவிடுவது எந்த வகையில் நியாயம்? இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படும் வரை ஒரு பிள்ளையை மனுதாரரும், மற்றொரு பிள்ளையை அவரது கணவரும் பராமரிப்பதில் எந்த தவறும் இல்லையே. இதை கடத்தல் சம்பவமாக கருத முடியாது. எனவே தற்சமயம் மனுதாரரின் மகள் அவரது தந்தையின் பராமரிப்பில் இருக்கலாம். தேவைப்பட்டால் கீழ்கோர்ட்டில் முறையீடு செய்து, உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

The post குடும்பமாக வசிப்பதுதான் இந்திய கலாச்சாரம் மகளை தந்தை அழைத்து செல்வது கடத்தலாகாது: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Related Stories: