இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி விளக்கம் அளிக்காததால் இறுதி முயற்சியாக ஒன்றிய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி மணிப்பூரில் நேரடி கள ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டமிட்டது. அதன்படி, கூட்டணியில் உள்ள 26 கட்சிகளில் இருந்து 16 கட்சியை சேர்ந்த 21 எம்பிக்கள் கொண்ட குழுவினர் 2 நாள் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து மணிப்பூரின் இம்பால் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். இம்பால் சென்றடைந்த அவர்கள் முதற்கட்டமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுராசந்த்பூருக்கு 2 குழுவாக பிரிந்து சென்றனர்.
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழு சுராசந்த்பூரின் ஆண்கள் கல்லூரி விடுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்றது. மக்களவை காங்கிரசின் துணைத்தலைவர் சவுரவ் கோகாய் தலைமையிலான மற்றொரு குழு சுராசந்த்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்றது. இரு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குக்கி இன மக்களை, பெண்களை சந்தித்து குழுவினர் கள நிலவரங்களை கேட்டறிந்தனர். கலவரத்திற்கான காரணம், அரசின் நிவாரண நடவடிக்கைகள், அமைதியை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிப்பு, இழப்புகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் விவரங்களை எம்பிக்கள் குழு கேட்டறிந்தது.
அங்கு தங்கி உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எம்பிக்கள் ஆறுதல் கூறினர். பின்னர் அங்கிருந்து இம்பால் திரும்பிய ஆதிர் ரஞ்சன் தலைமையிலான குழுவினர், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் கல்லூரியில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்று, மெய்தீஸ் சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர். மற்றொரு குழு, இம்பால் கிழக்கு மாவட்டம் அகம்பாட்டில் உள்ள ஐடியல் கேர்ள்ஸ் கல்லூரி நிவாரண முகாமுக்கும், பின்னர் இம்பாலின் மேற்கில் உள்ள லம்போய்கோங்காங்கில் உள்ள மற்றொரு முகாமுக்கும் சென்றனர். நேற்றைய ஆய்வைத் தொடர்ந்து இக்குழுவினர் இன்று காலை, ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்து, தற்போதைய நிலைமை மற்றும் மணிப்பூரில் விரைவில் அமைதியைக் கொண்டுவருவதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் என மணிப்பூர் மாநில காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த கள நிலவரங்களின் நாடாளுமன்றத்தில் அரசிடம் கேள்வி எழுப்பவும் இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
The post ‘இந்தியா’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் நேரில் கள ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினர் appeared first on Dinakaran.